சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கழுதை புலி தப்பி ஓடியது. அதை கண்டுபிடிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை வழக்கம்போல் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பூங்காவில் உள்ள 4 கழுதை புலி இருக்கும் இடத்திற்கு ஊழியர்கள் சென்றனர். அப்போது, 3 வயதான ஆண் கழுதை புலி இருந்த கூண்டு உடைந்து கிடந்தது. அந்த கழுதை புலியும் மாயமாகி இருந்தது.
பூங்கா முழுவதும் தேடி பார்த்தனர். இருப்பினும், இரவில் கழுதை புலியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து பூங்கா உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கழுதை புலி சிறிய வகையான விலங்குதான். அது, பூங்காவை விட்டு தப்பி செல்ல வாய்ப்பு இல்லை. பூங்காவின் சுவர் பல அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. எனவே வெளியில் தப்ப வாய்ப்பில்லை. விரைவில் தேடி கண்டுபிடித்து விடுவோம்’’ என்றார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
