×

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கடலில் வீணாகப் போகிறது காவிரி நீர்...குடிநீருக்கும் பயன்படாத அவலம்

திருச்சி: மேட்டூர் அணை  இன்று முழு கொள்ளளவை எட்டியது.  அதாவது அணையில் 120 அடி உயரம்(93.47 டிஎம்சி) தண்ணீர்தேங்கி உள்ளது. இன்னும் கர்நாடகாவில் இருந்து வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மிக பிரமாண்டமான இந்த அணை 1925ல் கட்டத்துவங்கி, 1934ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அணை நிரம்பி இருக்கிறபோது அணையின் ஒரு பகுதியில் இருந்து  அணையில் தண்ணீர் தேங்கியுள்ள மறுமுனை 60 மைல் தூரத்தில் இருக்கும். தமிழகத்தின் மேற்கு கரை கடல்  என்று சொல்லும்அளவுக்கு பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கடலூர், அரியலூர்  ஆகிய 11 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. 20 மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறுகிறது.  மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் காவிரியில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

 மேட்டூர் அணை கடந்த 5 வருடங்களுக்கு பிறகு இன்று தான் முழு கொள்ளளவை எட்டியது.  தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.  இந்த உபரி நீர் திருச்சி வந்ததும், முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு கடலுக்கு தான் செல்ல இருக்கிறது. கடந்த 2013ல் இப்படி  19.56 டிஎம்சி தண்ணீர்  கடலுக்கு விடப்பட்டது. கர்நாடகாவிடம் 2 டிஎம்சி, 3 டிஎம்சி தண்ணீர் பெற நாம் உச்சநீதிமன்றத்தில் பலமுறை வாதாடி போராடியும்  தண்ணீர் கிடைக்காத நிலை பல வருடங்கள் ஏற்பட்டதுண்டு.  ஆனால் கிடைத்த நீர் இந்த ஆண்டும் கடலுக்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட போகிறது.
காவிரியில் இருந்து கரூர், திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 17 கிளை வாய்க்கால்கள் பிரிகிறது. இந்த வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டால் 1 டிஎம்சி தண்ணீர் அளவுக்கு தினமும் திருப்பி விடலாம்.

 மேட்டூர் அணையில் உபரி நீர் இந்த ஆண்டும் வெளியேறும் என சாமானியர்களும் விவசாய சங்க நிர்வாகிகளும் கடந்த 2, 3  தினங்களுக்கு முன்பே பேச தொடங்கி விட்டனர். ஆனால் இன்று வரை கிளை வாய்க்கால்கள் காய்ந்து தான் கிடக்கின்றன. வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திருப்பி விடப்பட்டால் அந்த பகுதிகளில் உள்ள வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயனடைவதுடன்,  நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இன்று மேட்டூரில் இருந்து இன்று 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு தண்ணீர் இப்போது டெல்டா மாவட்டங்களுக்கு  ேதவையில்லை.  ஏனென்றால் ஆகஸ்ட் முதல்வாரத்தில் நாற்றங்கால் பணிகளை தொடங்கி,  2 வாரத்தில் நாற்றங்காலில் விதை விட்டு,  20 நாட்களுக்குள் பறித்து நடவு செய்வார்கள்.

அதாவது செப்டம்பரில் தான் நடவு பணி முழு மூச்சில் தொடங்கும். அப்போது தான் தண்ணீர் இந்த அளவு தேவை. அதைத்தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். சம்பா என்பது நீண்ட கால ரகம்.  இது அறுவடை ஆக 160 நாள் ஆகும். ஆனால் இப்போது விவசாயிகள் நீண்ட கால ரக விதைகளை பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. கால விரயம், தண்ணீர் பிரச்னை போன்றவற்றால் விவசாயிகள் மத்திய கால ரக நெல் விதைகளையே தேர்வு செய்கிறார்கள். இது 130 முதல் 140 நாளில் அறுவடைக்கு வந்து விடும். எனவே ஆகஸ்ட் 15க்கு பின்னர் நாற்று விடும்படி  வேளாண் அதிகாரிகளே பரிந்துரை செய்கிறார்கள்.  இதற்கான நாற்றங்கால் அமைக்கும் பணி ஆகஸ்ட் முதல்வாரத்தில்  தொடங்கினால் போதும்.  எனவே இன்னும் 10 நாள் தண்ணீர் வீணானது தான். இந்த தண்ணீரால் தற்போது குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.  இது தவிர நிலத்தடி நீர் உயரும்.
 
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கல்லணை கால்வாய் மூலம்  சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.  இந்த கல்லணை கால்வாய், மேட்டூர் அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 1934ல் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 148.76 கி.மீ. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர்,  மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுபடி பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது. கல்லணை கால்வாயில் மட்டும் 694 ஏரிகள் உள்ளன. இவை கல்லணை கால்வாய் மூலம் நிரப்பப்பட வேண்டும். கடந்த ஆண்டு இந்த ஏரிகளில் ஒன்று கூட நிரப்பப்படவில்லை.

இந்த ஆண்டு உபரி நீர் சென்றபோதிலும், இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்புமா என்பது சந்தேகம் தான். காரணம் இந்த கால்வாய் தூர்வாரப்படவில்லை. எனவே அதிக அளவு இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்டவில்லை. இவ்வளவு உபரி நீர்திறக்கப்பட்டும் கல்லணை கால்வாயில் 1011 கனஅடி மட்டுமே விடப்படுகிறது. இந்த அளவு தண்ணீர் விடப்பட்டால்  இன்னும் 2 மாதம் ஆனாலும் ஏரிகள் நிரம்பாது. அதிக அளவு இங்கு தண்ணீர் விடப்பட்டால் கால்வாய் தூர்வாரததால் ஆங்காங்கே வயல்வெளிகளில் பாய்ந்து தண்ணீர் வீணாகும், சேதம் ஏற்படுத்தும் என்பதால் அதிக அளவு தண்ணீர் இந்த பகுதிக்கு ஏன் விடவில்லை என விவசாயிகள்  புகார் கூறுகிறார்கள்.

வரும்  வடகிழக்கு பருவமழையும்  கை கொடுக்கும் என்பதால் சம்பா சாகுபடிக்கு 130 டிஎம்சியே போதுமானது. அதாவது ஆகஸ்ட் 15 முதல் சம்பா அறுவடை வரை உள்ள காலங்களில் 130 டிஎம்சி போதுமானது. அதே வேளையில் மழை நீண்ட நாட்கள் பெய்தால் தேவை இன்னும் குறையும். எனவே இந்த ஆண்டு சம்பாவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என உறுதியாக நம்பலாம். அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை, டிசம்பர் மாதம் முழுவதும் பெய்யாமல் பாதியிலேயே நின்று விட்டால், மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும். வழக்கமாக ஜனவரி 28 வரை சம்பாவுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும்.  வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைபொழிவை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் தேவையான அளவு திறக்கப்படும்.

இந்த பருவத்தில் அதிகமாக திறக்கப்பட்டால், பின்னர் எதிர்வரும் ஆண்டில் ஜூன் மாதம் வரை குடிநீருக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டாக வேண்டும். அதற்கும் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் அரியலூர், தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் அணைக்கரைக்கு சென்று அங்கிருந்து வீராணம் ஏரிக்கும், கடலூர் மாவட்ட பாசனத்திற்கும் வாய்க்கால்கள் மூலம் செல்கிறது.  வீராணம் ஏரி 1.47 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரியும் இப்போது காய்ந்து கிடக்கிறது. இதுவும் இந்த ஆண்டு தூர்வாரப்படவில்லை. எனவே 1.47 டிஎம்சி  நிரப்பமுடியுமா என்பது சந்தேகம் தான். இங்கிருந்து தான் சென்னை மாநகர குடிநீருக்கும் தினசரி கொண்டு செல்லப்படுகிறது.
 
தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான நீர் நிர்வாகம் குறித்து மூத்த வேளாண் வல்லுனர் கலைவாணன் கூறும்போது,  மேட்டூரில் இருந்து இப்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்.  ஆனால் பல வாய்க்கால்கள் தூர்ந்துள்ளதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் சீராக செல்லுமா என்பது  சந்தேகம்.குடிமராமத்து பணியும்  தாமதமாக தொடங்கப்பட்டதால் பல இடங்களில் பணிகள் பாதியில் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பெருமளவு வந்து கொண்டிருக்கும் நிலையில் இனிமேல் பாசனத்திறனை மேம்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்தால் தான் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமையும்’ என்றார்.

இவ்வளவு தண்ணீர் வந்தும் சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இருக்க வேண்டி உள்ளது. இதற்கு காரணம்  கிடைக்கும் நீரை சேமிக்கும் அளவுக்கு இங்கு அணைகள் இல்லை என்பது தான். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மேலும் பல இடங்களில் தடுப்பணைகளை கட்டினால் தான்  வீணாகாமல் தண்ணீரை சேமிக்க முடியும். 50 ஆண்டுகாலம் காவிரிக்காக போராடியும் கிடைக்காத தண்ணீரை இயற்கை நமக்கு தந்து உள்ளது. அதையும் நாம் கடலுக்கு அனுப்பி விட்டால் எப்படி? புதிய தடுப்பணைகள் கட்டுவது பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது. அது ஒன்றுதான், காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

ஆடிப்பெருக்கு கோலாகலம்:வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காவிரி டெல்டா  மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாட இருக்கும் ஆடிப்பண்டிகைக்கு பயனுள்ள  வகையில் தண்ணீர் வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு காவிரியில் நீந்தி  குளிக்கும் அளவுக்கு இந்த ஆண்டு தான் ஆடிப்பெருக்கு விழா வர உள்ளது.

பயிர்க்கடன் உடனே கிடைக்குமா?: கூட்டுறவு வங்கிகள் மூலம் போதுமான அளவுக்கு விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்படுவதில்லை. காரணம் கூட்டுறவு வங்கிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே பொதுத்துறை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் உடனே வழங்கப்படவேண்டும். அப்போது தான் விவசாயிகள் சாகுபடி பணியை உடனே தொடங்க முடியும்.  7 வருடமாக குறுவை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு சம்பாவும் பொய்த்து போன நிலையில்,  விவசாயிகளின் பழைய கடன்களை காரணம் காட்டி வங்கிகள் கடன் வழங்க மறுக்க கூடாது. உடனடியாக விவசாயிகளுக்குடன் கிடைக்க  தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடக முதல்வருக்கு வேண்டுகோள்: அனைத்து விவசாயிகள் சங்க  ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: பல ஆண்டுகளாக விவசாயம் பொய்த்த நிலையில் விவசாயிகள் அனைவரும் கடனாளிகளாக உள்ளனர். எனவே உடனடியாக விவசாயத்தை தொடங்க  அரசு  ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் தரப்படுகிறது. அதுபோல தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.  
ஏரி , குளங்கள் நிரப்பப்படுவதை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து முழுவதுமாக தண்ணீர் பயன்படுத்த வேண்டும். கர்நாடக முதல்வர் உபரி நீரைத்தேக்க  ராசிமணல், மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளபோவதாக கூறுகிறார். அப்படி உண்மையிலேயே அவருக்கு உபரி நீரை தேக்கத்தான் அணை வேண்டும் என கருதினால் அந்த அணையை தமிழக அரசே கட்டவும், பராமரிக்கவும் கர்நாடக முதல்வர் அனுமதிக்க வேண்டும். மின்சார உற்பத்தியை மட்டும் கர்நாடக மாநிலம் பயன்படுத்திக்கொள்ளட்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

திருவெறும்பூர்: மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.  இதனால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே திருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், காவிரியில் குளிக்க கூடாது. கால்நடைகளை விட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் கல்லணை கரையோர மக்களுக்கு தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  வேங்கூர், ஒட்டக்குடி, முல்லைகுடி, சர்க்கார்பாளையம், பனையக்குறிச்சி, காவிரி வடகரையான உத்தமர்சீலி, பனையபுரம், கவுத்தரசநல்லூர், திருவளர்சோலை, கிளிக்கூடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்டோர மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் ரங்கம், அம்மாமண்டபம், கீதாபுரம் பகுதிகளிலும் குளிக்க எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளது.  கம்பரசம்பேட்டை தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என அறிவுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அணை அருகே சிவப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளையும், கம்பரசம்பேட்டை பகுதியிலும் கலெக்டர் ராஜாமணி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவிரியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம்: ஒரே ஆண்டில் 7 முறை நிரம்பிய மேட்டூர் அணை:

மேட்டூர் அணையின் 84 ஆண்டு கால வரலாற்றில் இன்று அணை 39வது ஆண்டாக நிரம்பியது. 45 ஆண்டுகள் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. கடந்த 1940, 1959, 2007 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் அணை தலா 7 முறை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 4.8.2013ல் இதற்கு முன் நிரம்பியபோது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,35, 491 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,21, 846 கனஅடி திறக்கப்பட்டது. இதனால் திருச்சியில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. எனவே வெள்ளத்தை சமாளிக்கவும், சேதத்தை தவிர்க்கவும் முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் கொள்ளிடத்தில் தண்ணீரை திருப்பி விட்டனர். 5.8.2013ல் கொள்ளிடத்தில் தண்ணீர்திறக்கப்பட்டது. 7.8.13 அன்று வினாடிக்கு 1, 14,420 கனஅடி வீதம் கொள்ளிடத்தில் விடப்பட்டது.

இப்படி விடப்பட்ட 19.56 டிஎம்சி தண்ணீர்கடலுக்கு சென்றது.இன்னும் 2 தினங்களில் மேட்டூரில் இருந்து உபரி நீர்மேலும் அதிகமாக திறக்கப்படும் நிலை ஏற்படும். அப்போது முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் உபரி நீர் திறக்கப்படும். 1910ல் மேட்டூருக்கு வினாடிக்கு 2.15 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. அது பெரும் சேததத்தை ஏற்படுத்தியது. எனவே மேட்டூரில் அணை கட்டியே தீரவேண்டும் என்ற திட்டம் மேலும் வலுப்பெற்றது. அணை கட்டுமான வேலை தொடங்கும் சூழ்நிலையில் 1924ல் மேட்டூருக்கு வினாடிக்கு 4.56 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இது தான் காவிரி வரலாற்றில் மிக அதிகமாக வந்த வெள்ளப்பெருக்கும். அதைத்தொடர்ந்து 1925ல் மேட்டூர் அணை கட்டும் பணி துவங்கி 1934ல் நிறைவு பெற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய அணை மேட்டூர். இது 120 அடியை எட்டும்போது அணையில் 93.47 டிஎம்சி தண்ணீர்இருக்கும். இதன் மூலம் தமிழகத்தின் 20 மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறுகிறது. சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.கடந்த 7.8.2013ல் மேட்டூர் அணையில் 121.40 அடி தண்ணீர் தேக்கப்பட்டது.அப்போது அணையில் 95.297 டிஎம்சி தண்ணீர் இருந்தது. இதற்கு முன் ஒரு முறை வெள்ள காலத்தில் 124 அடிக்கு அணையில் தண்ணீர் தேங்கியது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Mettur Dam, TMC Water, Surplus Water, Cauvery Water, Sea, Drinking Water, Pool, Banquets
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...