×

அல்லிமலர் பூக்கும் குளம், சுரங்கப்பாதையுடன் அடர்ந்த காட்டுக்குள் சாரங்கல் துருகம் கோட்டை

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் உள்ளது சாரங்கல் கிராமம். ஆம்பூர் வனச்சரக காப்புக்காடுகளும், பேரணாம்பட்டு வனச்சரக காப்புக்காடுகளும் இணையும் இடத்தில் உள்ள இக்கிராமத்துக்கு அருகே அடர்ந்து காடு உள்ளது. இந்த காட்டில் கற்கள் சாரம் அமைத்தது போல் சாய்வாக குவியல் குவியலாய் கொட்டி கிடப்பதால் ‘சாரம்கல்’ என அழைக்கப்பட்டு பின்னர் காலப்போக்கில் “சாரங்கல்” என இந்த கிராமம் தற்போது அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்துக்கு 1 கி.மீ. தூரத்துக்கு மேற்கே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் துருகம் மலை உள்ளது. மலையின் மேற்கே துங்கல் ஆறு ஓடுகிறது. வடக்கே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாய்க்கனேரி ஊட்டல் மலையும், தெற்கே பெருங்கானாறு என்னும் பெத்தவொங்கா ஆறும் ஓடுகிறது. ஆம்பூர் மற்றும் பேரணாம்பட்டு வனச்சரக காப்புக்காடுகளில் அரங்கல்துருகம், பொன்னப்பல்லி  பெரியதுருகம், பைரப்பள்ளி  சின்னதுருகம், கைலாசகிரி துருகம் போன்ற வனப்பகுதிகள் உள்ளன.

இதில் அரங்கல்துருகம் மலையில் கோட்டை உள்ளது.  கோட்டைக்கு அருகே புகழ்பெற்ற தர்காவும் உள்ளது. இங்கு உரூஸ் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதேபோல் கைலாசகிரி துருகம் மலையில் பாதுகாப்பு அரண்போல் அமைந்து உள்ள மதில் சுவர்களும், பீரங்கிகள் பொருத்தும் இடங்களும் காணப்படுகின்றன. சின்னதுருகம், பெரியதுருகம் மலைகள்  அடர்ந்த காட்டுக்குள் இருப்பதாலும், சிறுத்தை மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ளதாலும் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்வதில்லை.இதில் சாரங்கல் துருகம் மலையில் அமைந்துள்ள கோட்டை பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. துருகம் மலை மேல்பகுதி முழுவதும் சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டு உள்ளன. இந்த சுற்றுச்சுவர்கள் பாதுகாப்பு கருதி வெளிப்புற சுற்றுச்சுவர், உட்புற சுற்றுச்சுவர் என இரு பிரிவாக கட்டப்பட்டு உள்ளது. இந்த சுற்றுச்சுவர்கள் நன்கு கைதேர்ந்த கட்டிட கலைஞர்களால் கடின பாறைகளில் அஸ்திவாரம் அமைத்து கட்டப்பட்டுள்ளது.

வெளிப்புற சுற்றுச்சுவரை கடந்து உள்ளே செல்ல பிரதான வாயில் மட்டுமே உள்ளது. வாயிலுக்கு அருகே பாதுகாப்பு வீரர்கள் அமரும் அறை உள்ளது. கோட்டை பிரதான வாயிலின் உள்ளே செல்லும் இடத்தில் அல்லிமலர்கள் பூத்துக்குலுங்கும் அழகிய மிக ஆழமான தடாகம் காணப்படுகிறது. கோட்டையின் பின்புறம் மேற்குப்பகுதியில் அதிக ஆழம் உள்ள, அபாயகரமான வற்றாத இரு பெரிய சுனைகள் உள்ளது. கோட்டையின் தெற்கு பகுதியில் பெரிய பாறையின் கீழ் பாதுகாப்பு வீரர்கள் தங்குமிடம் உள்ளது. இந்த தங்கும் இடத்தில் சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அவை இப்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதன் அருகே  பாறை இடுக்கின் உள்ளே செல்லும் சுரங்கப்பாதை  காணப்படுகிறது. கோட்டையின் உள்ளே ஆங்காங்கே சமையல் செய்ய தேவையான உணவு பொருட்கள் தயாரிக்கும் 3 உரல்களும், பழங்கால அடுப்புகளும் காணப்படுகின்றன. துருகம் மலை கோட்டையை சுற்றி புளிய மரங்களும், விளாம்பழம் மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. சாரங்கல் துருகம் மலை கோட்டைக்கு கீழே பாதுகாப்பு வீரர்கள் தங்கும் இடங்களும், குதிரை லாயம் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Alimarler flower, pond, tunnel, forest, turugam fort, vellore
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு