×

நாகர்கோவிலில் அரசு நிதி வீணடிக்கப்படும் அவலம்: புதருக்குள் புதையும் நகராட்சி பூங்காக்கள்

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியதும், பெரியதுமான பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. நகராட்சியின் மையப்பகுதியில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா உள்ளது. இது நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவின் ஒரு பகுதி தற்போது கார் பார்க்கிங் ஏரியாவாக மாறிவிட்டது. முதலில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டு இருந்தன. இப்போது 100க்கும் மேற்பட்ட கார், பைக்குகள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது. பூங்காவில் அடிப்படை வசதிகளையும், சிறுவர்களை கவரும் வசதிகளையும் ஏற்படுத்தி அதற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதின் வாயிலாக பூங்காவை ேமம்படுத்திட இயலும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் பூங்காவை சீர்செய்ய அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அவை பலன் அளிப்பது இல்லை. பெயரளவில் பணிகள் நடைபெற்றபோதிலும் தொடர்ந்து பராமரிப்பின்மையால் பூங்காக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு தனியார் பங்களிப்புடன் பூங்கா செயல்பட்டபோது வருகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததன் காரணமாக, தனியார் வசம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்ட பூங்காவை நகராட்சி நேரடியாக கட்டணம் வசூலிக்க தொடங்கியது. பராமரிப்பு பணிகளும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பூங்காவில் உள்ள நீரூற்றுகள் தற்போது செயல்படுவது இல்லை. இதே போல் பல பகுதிகளும் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது.

விளையாட்டு உபகரணங்கள் உடைந்துவிட்டன. இங்குள்ள நினைவு ஸ்தூபி, போர் விமானம் போன்றவை பராமரிப்பு இல்லாததால் பாழ்பட்டு வருகின்றன. பூங்காவில் மது அருந்துதல், புதர் மறைவில் ஜோடிகளின் சில்மிஷங்கள் அதிகரிக்கிறது. பெரிய அளவில் உள்ள பூங்காக்களின் நிலை இப்படி என்றால் சாலையோரங்களிலும், ெதருக்களின் மையப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. நாகர்கோவில் டெரிக் ஜங்ஷன் பகுதியில் இருந்த பூங்கா சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டது. இங்கு மாலை வேளையிலும், ஓய்வு நேரங்களிலும் முதியவர்களும், குழந்தைகளும் வருகை தந்து  பொழுதை போக்குவது வழக்கம். தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் இப்போது இங்கு ரவுண்டானா ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை போன்று நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்தில் எம்.எஸ் ரோடு ஓரத்தில் கடந்த 2011ம் ஆண்டு நகராட்சி பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தப் பட்டன. இந்த பூங்கா அப்போதைய நகராட்சி தலைவர் அசோகன் சாலமன் தலைமையில் திறப்பு விழா நடந்திற்கான கல்வெட்டு ஒன்றும் அங்கு இடம்பெற்றுள்ளது. தற்போது பூங்கா முற்றிலும் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிய பகுதியாக மாறிவிட்டது. புதருக்குள் விளையாட்டு உபகரணங்கள் சிக்கியுள்ளன. மேலும் அவை உடைந்தும், துருப்பிடித்தும் பயன்படாத நிலைக்கு மாறிவிட்டது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள இந்த பூங்காவை நகராட்சியும், கண்டுகொள்ளவில்லை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

நாகர்கோவில், இருளப்பபுரத்தில் நகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் போடப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றிலும் கம்பியால் மதில்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஓகி புயல் தாக்கிய போது இந்த பூங்கா பலத்த சேதம் அடைந்தது. பூங்காவின் மேற்கு பகுதியில் உள்ள மதில்சுவர்கள் கம்பிகள் அனைத்தும் உடைந்து விழுந்து கோரமாக காட்சியளிக்கிறது. மேலும் பூங்காவில் நின்ற பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தது. பல மாதங்கள் ஆகியும் இந்த மரங்களை அகற்றவில்லை. மேலும் உடைந்த மதில்சுவரையும் சரிசெய்யவில்லை. நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு சேதமான பூங்காவை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

இந்த பூங்காவை சரிசெய்து, பூங்காவிற்குள்ளே முறிந்துவிழுந்த மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அம்ரூத் திட்டத்தில் புதிய பூங்காக்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே உள்ள பூங்காக்களின் நிலைமை உணர்ந்து அதிகாரிகள் முதலில் பார்வையிட்டு சீர்செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Nagarcoil, municipal park, government funding, terrick junction
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...