×

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் புறக்கணிப்பு: சிவசேனா - பாஜ கூட்டணி முறிவு?...அமித் ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

மும்பை: ‘வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மகாராஷ்டிராவில், பாஜவினர் தனியாக சந்திக்கத் தயாராக வேண்டும்’ என்று பாஜ தலைவர் அமித் ஷா பேசியதற்கு, சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 20ம் தேதி மத்திய பாஜ அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், பாஜவின் கூட்டாளியான சிவசேனா கட்சி, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, தீர்மானத்துக்கு முந்தைய நாள் பாஜ தலைவர் அமித்ஷா, உத்தவ் தாக்கரேவிடம் தனிப்பட்ட முறையில் ஆதரவு கோரியதால், கண்டிப்பாக அரசுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திலேயே கலந்துகொள்ளாமல் சிவசேனா புறக்கணித்தது. இது, பாஜ அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழில், ‘நாட்டை ஆள்பவர்கள் கொலைகாரர்கள். மிருகங்களைக் காப்பாற்றி மனிதர்களை கொல்பவர்கள்’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்தது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசிய விதம் குறித்தும் சிவசேனா புகழாரம் சூட்டியது. இதையடுத்து மகாராஷ்டிரா பாஜவினர் மத்தியில் பேசிய அமித்ஷா, ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ தனித்துப் போட்டியிடும். அதற்கு ஏற்றாற் போல் வேலைகளை இப்போதே ஆரம்பியுங்கள்’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘நான் சாதாரண மனிதனின் கனவுக்காக போராடுகிறேன். பிரதமரின் கனவுக்காக அல்ல. நமக்கு ஒரேயொருவர் மட்டும் நண்பர் அல்ல. பொது மக்கள் தான் நமது நண்பர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக பாஜ - சிவசேனா கட்சிகள் கூட்டாக தேர்தல்களை சந்தித்து வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதேபோல், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையும் ஒன்றாக சந்தித்தன. ஆனால், பாஜவுக்கு தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைத்தது. பின்னர், இந்த ஆண்டு நடந்த மும்பை உள்ளாட்சித் தேர்தலை இரு கட்சிகளும் தனித் தனியே சந்தித்தன. இந்நிலையில், பாஜ - சிவசேனா கூட்டணி விவகாரம் உச்சக்கட்ட மோதலில் இருப்பதால், 2019ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் தனித்தனியாக இருகட்சிகளும் போட்டியிட வாய்ப்புள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : BJP, Shiv Sena, no-confidence motion, Amit Shah, Uddhav Thackeray, PM Modi
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...