×

கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மந்தம் தாமிரபரணி தாகம் தீர்ப்பது எப்போது?

* விரைந்து முடிக்க சிவகாசி பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி : தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மந்தகதியில் நடப்பதால், சிவகாசிக்கு குடிநீர் வருவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சிக்கு தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதற்காக வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் தற்போது நகரில் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சிவகாசி நகரின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்க ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, பல மாதங்களாக பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம், பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் கிணறு அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. சங்கரன்கோவில் நகராட்சியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவகாசி நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் குழாய் பதிக்கும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.

இதற்காக சங்கரன்கோவிலில் இருந்து சிவகாசி வரை சாலையோரம் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவேங்கடம் வரை குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
சிவகாசி-திருவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி அருகே, தரைமட்ட குடிநீர் தொட்டி அமைத்து, அங்கிருந்து சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்பேத்கார் சிலை பின்புறம், கிருதுமால் ஓடையில் புதிதாக கட்டப்படவுள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீரை ஏற்றி, நகரில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக மந்தமாக நடக்கிறது. இதனால், இத்திட்டத்தில் குடிநீர் பெறுவதில் காலதாமதமாகி வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, சிவகாசி நகரின் மக்களின் குடிநீர் தேவை நிரந்தரமாக தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : thamirabharani,water project,sivakasi, thamirabharani water project
× RELATED செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம்...