×

மாவட்ட தலைநகராக இருந்தும் தேனியில் அரசு மருத்துவமனையே இல்லை

*  நோயாளிகளுடன் அலைக்கழியும் மக்கள்
*  துணை முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?


தேனி : மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்து பெற்றும், தேனியில் அரசு மருத்துவமனை இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் நோயாளிகளை அழைத்துக்கொண்டு அருகே உள்ள மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சகல வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேனி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 1997ல் உருவானது. தலைநகரான பிறகு தேனி பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்தது. இதனால் இங்கு குடியேறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. கல்வியில் ஒரு பக்கம் அசுர வளர்ச்சி என தொடங்கி, வர்த்தகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரபல நிறுவனங்கள் தேனியை மையம் கொண்டு புதிய வர்த்தக நிறுவனங்களை தொடங்கி வருகின்றன. இதனால் தேனியில் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் அசுர வளர்ச்சியை தேனி தொட்டு வருகிறது.

alignment=

நவீன மருத்துவமனை மாவட்ட தலைநகராக தேனி உருவாவதற்கு முன்னர், தேனியில் என்.ஆர்.தியாகராஜன் நினைவு அரசு மருத்துவமனை பழைய ஜி.எச்.ரோட்டில் இருந்தது. சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கடந்த 1969ல் துவங்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, நவீன மருத்துவ உபகரண வசதிகளோடு தேனி என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனை வளர்ந்து வந்தது. இம்மருத்துவமனை வளாகத்தில் ரூ.பல கோடி மதிப்பிலான கட்டிடங்கள் கட்டப்பட்டன.

2 ஆயிரம் பேர் சிகிச்சை என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனையில் சுமார் 200க்கும் அதிகமான நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றனர். நாள்தோறும் தேனி மற்றும் தேனியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் இங்கு வந்து புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுன்றனர். இதனால் இம்மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதிக்க தேவையான நவீன வசதிகளுடன் கூடிய எக்ஸ்ரே, ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த சேமிப்பு நிலையம், பிரசவ சிறப்பு வார்டுகள், குழந்தைகள் சிறப்பு வார்டுகள், எலும்பு பிரிவு வார்டுகள் எராளமான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி கட்டிடங்களில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டால் அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட்டது. இத்தனை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தேனி நகரின் மையப்பகுதியில் இருந்ததால் மக்கள் மருத்துவமனைக்காக எந்நேரமும் வந்து சென்றனர்.

புரட்டி போட்ட ‘2004’

மருத்துவ வசதியை அனுபவித்த தேனி பகுதி மக்கள் வாழ்வில் கடந்த 2004 அதிமுக ஆட்சியின்போது, சோதனை ஏற்பட்டது. ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த ஆண்டிபட்டி தொகுதிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காக, ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் விலக்கு பகுதியில் அரசு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்தது. இதற்கு பிறகு, கடந்த 2004ம் ஆண்டு ஒரு நள்ளிரவில், தேனி என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனையில் இருந்த அத்தனை நோயாளிகளையும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றினர்.


மேலும், அங்கிருந்த அனைத்து கட்டில்கள், பெஞ்ச், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து நவீன கருவிகளும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.


புதர் மண்டிய அவலம்

தேனி அரசு மருத்துவமனையில் இருந்த பொருள்களை எல்லாம் கொண்டு செல்வதையறிந்து நள்ளிரவில் கூடிய பொதுமக்களிடம், பழைய பொருள்களுக்கு பதிலாக புதிய கட்டில், கருவிகள் வரப்போவதாக அங்கிருந்த அதிகாரிகள் சமாளித்தனர். அனைத்து பொருள்களையும் இடம் மாற்றியபிறகு, சுறுசுறுப்பாய் செயல்பட்டு வந்த இம்மருத்துவமனை இழுத்து பூட்டப்பட்டது.இதனால் ரூ.பல கோடி மதிப்பிலான கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டி காட்சி அளிக்கிறது.


பல கிமீ தூரம் பயணம்

நகரின் மையப்பகுதியில் இலவசமாக சிகிச்சை பெற்ற மக்கள், தற்போது அவசர சிகிச்சைக்காக தேனியில் இருந்து பல கிமீ தூரம் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தேனியில் மீண்டும் சகல வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ‘கருணை அடிப்படையில்’ மீண்டும் அரசு மருத்துவமனையை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.


இம்மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர், ஒரு நர்சையும் நியமித்தனர். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் இம்மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சிறிய நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து ஏற்பட்டால் சிகிச்சை பார்ப்பதில்லை. பிரசவம் பார்ப்பதில்லை. தற்போது பணிக்கு வரும் டாக்டர், நர்ஸ் வரும்போதே, குறிப்பிட்ட ரக காய்ச்சல், தலைவலிக்கான அரசு மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்து நோயாளிகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுவோரும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ, கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட மருத்துவமனைகளை நோக்கி ஓடவேண்டியுள்ளது.


‘மனநலமும்’ வரவில்லை

பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிட வசதிகளை கொண்ட இம்மருத்துவமனையில், 50க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் தேனி நகரில் ஒரு பகுதி வீணாக பாழடைந்துள்ளது பலரையும் வேதனையடைய செய்துள்ளது. பயன்பாடற்ற நிலையில் மருத்துவமனை உள்ளதால் பல கட்டிடங்கள் விரிசல் விழுந்தும், பாம்பு புற்றுகள் முளைத்தும் காணப்படுகிறது. செயலிழந்து போன இம்மருத்துவமனை வளாகத்தில் மனநல மருத்துவமனை கொண்டு வரப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் கடந்து விட்டபோதும், இதுவரை மனநல மருத்துவமனையும் வரவில்லை. தலைநகர் என்ற பெருமையை மட்டுமே பேசிக்கொள்ளும் தேனி வாழ் மக்களின் அவசிய தேவையான இம்மருத்துவமனை வளாகத்திற்கு அரசு புத்துணர்வூட்ட வேண்டும்.


சிதிலமடைந்த கட்டிடங்களை சரிசெய்து, சகல வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையை இவ்வளாகத்தில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.



புதர் மண்டிய இடத்திற்கு  புத்துயிர் தர வேண்டும்

alignment=

இந்திய மருத்துவக்கழகத்தை சேர்ந்த மருத்துவரிடம் கேட்டபோது, ‘‘தேனி என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனை இடத்தை மனநல மருத்துவமனையாக மாற்றிட அரசு அறிவித்துள்ளது. எனவே, இம்மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் காலியாக கிடக்கும் மருத்துவமனை புத்துணர்வு பெறும்’’ என்றார்.
தேனியை சேர்ந்த வக்கீல்.சுரேஷ்குமார் கூறியதாவது, ‘‘தேனி நகர் மத்தியில் என்.ஆர்.டி.நினைவு அரசு மருத்துவமனை செயல்பட்டபோது ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் சிகிச்சை பெற வசதியாக இருந்தது. இம்மருத்துவமனை இருந்தபோது, கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் பயன் பெற்றார்கள். இப்போது காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மருத்துவமனை செயல்படும் என்பதும், அதிலும் ஒரேயொரு மருத்துவர் மட்டும் வந்து சிகிச்சையளித்து வருவது தேனி நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்யாது. இம்மருத்துவமனையில் மனநல மருத்துவமனை வரும் என்றார்கள். அதுவும் இதுவரை வரவில்லை. மனநல மருத்துவமனையை விரைவில் கொண்டு வருவதோடு, மனநல மருத்துவமனையுடன் பொது மருத்துவ பிரிவினை விரிவுபடுத்தி புதர் மண்டிக் கிடக்கும் மருத்துவமனை வளாகத்திற்கு, புத்துயிர் கொடுத்து சுகாதார வளாகமாக மாற்ற வேண்டும்’’ என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Theni, government hospital,District head,Education, facility
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...