×

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் : மாலையில் ஓட்டெடுப்பு

புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று முழுவதும் விவாதம் நடத்தி இறுதியில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தின் முந்தைய குளிர்க்கால கூட்டத் தொடரில்,  மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் அவையில் தொடர்ந்து போராட்டங்கள் நிலவுவதால், நம்பிக்கையில்லா தீர்மான கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மக்களவை தொடங்கிய முதல் நாளிலேயே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். ஜீரோ நேரத்தில், மோடி அரசுக்கு எதிராக  தெலுங்கு தேசம்  எம்பி கேசினேனி சீனிவாஸ், நம்பிக்கையில்லா தீர்மான  நோட்டீஸ் கொடுத்தார்.  இதேபோல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் அன்றைய தினம்  நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்  கொடுத்தனர்.

50க்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால், இதைக் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த  சபாநாயகர், நோட்டீஸ் கொடுத்த எதிர்க்கட்சி  உறுப்பினர்களின் பெயர்களை  வாசித்தார். இந்த தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனவும், முடிவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பாஜ  தலைமையிலான தே.ஜ கூட்டணி அரசு பதவியேற்று, நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக  கொண்டு வரப்படும் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதுவாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக இருக்கும் என நேற்று மேட்டூர் அணை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதேபோல், அரசுக்கு ஆதரவாக  வாக்களிக்கப் போவதாக சிவசேனா தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தில், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவோம் என டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.  கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை   ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி  எம்.பி.க்களுக்கு  அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா உத்தரவிட்டார். ஆனால் அக்கட்சியின் எம்.பி.  திவாகர் ரெட்டி, மக்களவையில் இன்று  நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி  உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேட்டியளித்த ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, ‘‘மத்திய  அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க  எதிர்க்கட்சிகளிடம் போதிய பலம் உள்ளது’’ என்றார். இதுபற்றி கருத்து  தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார், ‘‘சோனியா  காந்தியின் கணக்கு பலவீனமானது’’ என்றார். பா.ஜ பொதுச் செயலாளர் ராம் மாதவ்  கூறுகையில், ‘‘இந்திய கணக்குப்படி பார்த்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை  தோற்கடிக்க மக்களவையில் அரசுக்கு போதிய பலம் உள்ளது. சோனியா காந்திக்கு  வேறு எந்த கணக்கும் தெரியுமா என தெரியவில்லை’’ என்று கிண்டலாக கூறினார். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ஆனந்த்  சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது, எண்  கணக்கு என்பதாக மட்டுமின்றி, அரசின் தோல்விகளை பற்றி விவாதிப்பதாக அமையும்.  அதுதான் இங்கு முக்கியம்’’ என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை