×

மாநிலம் பரிந்துரைத்தவர்கள்தான் மொழிபெயர்த்தனர் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு தமிழக அரசே காரணம் : மாநிலங்களவையில் அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி : ‘‘நீட் தேர்வு குளறுபடிகளுக்கு தமிழக அரசுதான் காரணம். தமிழக அரசு பரிந்துரைத்தவர்கள்தான், வினாத்தாளை தவறுதலாக தமிழில் மொழிபெயர்த்தனர். கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த அடுத்தாண்டு முதல் மாநில அரசுகளிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்படும்’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த நீட் கேள்வித்தாள் மொழி பெயர்ப்பில்  இந்தாண்டு பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் பேசுகையில், ‘‘மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் 49 கேள்விகளை தவறாக மொழிபெயர்த்ததால் தமிழகத்தில் இருந்து மருத்துவ நுழைவுத்தேர்வை எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர் கூறியதாவது:
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக ேமலும் கருத்து தெரிவிக்க முடியாது. எனினும் நீட் கேள்வித்தாளை மொழி பெயர்ப்பதற்கான அதிகாரிகளை தமிழக அரசுதான் பரிந்துரைத்தது. அவர்கள்தான் மொழிபெயர்த்தனர். இதில் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது.
அடுத்தாண்டு முதல் நீட் கேள்வித்தாள் நிபுணர்களால் மிகத்துல்லியமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மாநில அரசுகளிடம் இருந்து பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு பெற்றுக்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் கூறினார். விஜிலா சத்யானந்த் மேலும் பேசுகையில், `‘நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு மையம் வெகுதூரத்தில் ஒதுக்கப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர்’’ என்று குற்றம்சாட்டினார்.

சொந்த இடத்திலேயே எழுதலாம்
விஜிலா சத்யானந்த்துக்கு பதில் அளித்த ஜவடேகர், `‘நீட் தேர்வுக்கு அடுத்தாண்டு முதல் தொலைதூரத்தில் தேர்வு மையம் ஒதுக்கக்கூடாது என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார். இது தொடர்பான பிரச்னையை மற்றொரு எம்பி அவையில் எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, `‘நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இனி மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம்  இல்லை. தாங்கள் விரும்பிய இடத்திலேயே தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் அவையில் உறுதியளித்துள்ளார். அதனால் கூடுதல் கேள்விகள் தேவையில்லை’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம்...