×

அழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : 27ம் தேதி தேரோட்டம்

அலங்காநல்லூர் :அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம்  வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று காலை 8.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அங்குள்ள  தங்கக்கொடிமரத்தில் மேளதாளம் முழங்க, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து நேற்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை தங்கப்பல்லக்கு உற்சவம், இரவு சிம்மவாகன புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27ம் தேதி ஆடி பவுர்ணமியன்று நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவியர்களுடன் சுந்தரராஜப்பெருமாள்  திருத்தேரில் எழுந்தருள்கிறார். அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. ஆக. 11ம் தேதி ஆடி அமாவாசையன்று இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!