×

யு.எஸ். ஓபன் டென்னிஸ் விக்டோரியா அசரன்கா நேரடி தகுதி இல்லை

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் 2 முறை பைனல் வரை முன்னேறிய விக்டோரியா அசரன்கா, இம்முறை நேரடி தகுதி பெறத் தவறியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் 27ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதல் 101 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியும். நேரடி தகுதிக்கு இந்த வார தரவரிசைப் பட்டியல் கணக்கில் கொள்ளப்பட்டது. இதன்படி, யு.எஸ். ஓபனில் 2 முறை பைனல் வரை முன்னேறியவரான பெலாரசின் விக்டோரியா அசரன்கா மகளிர் ஒற்றையர் பிரிவில் நேரடி தகுதி பெறத் தவறி உள்ளார். இந்த வார தரவரிசையில் அவர் 108வது இடமே பிடித்துள்ளார். முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான அசரன்கா 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 முறை யு.எஸ். ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரிய ஷரபோவா உள்ளிட்ட வீராங்கனைகள் நேரடி தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா நேரடி தகுதி பெறத் தவறி உள்ளார். அவர் 199வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இம்முறை ஆண்கள், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.25.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.68 லட்சம் அதிகமாகும். 2ம் இடம் பெறுவோருக்கு ரூ.12.5 கோடி பரிசாக தரப்படும். மொத்த பரிசுத்தொகை ரூ.360 கோடி ஆகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்..