×

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பொருட்கள் இருக்க கூடாது : மெட்ரிக்குலேஷன் இயக்குநர் அதிரடி உத்தரவு

சென்னை : மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் எந்த இடத்திலும் அச்சுறுத்தும் பொருட்கள் வைக்க கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரிக்குலேஷன் இயக்குநர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு குறித்து பின்பற்ற வேண்டிய விரிவான அறிவுரைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆனால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அதை பின்பற்றாமல் உள்ளது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பள்ளி நிர்வாகம் மெத்தனமாக இருந்துள்ளது தெரிகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் உறுதியாக இருக்கிறது. எனவே, மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தினர் பின்வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

* பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சோப் ஆயில், பினாயில், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை பள்ளி கட்டிடத்துக்கு வெளியில் வைக்க வேண்டும். இதுபோன்ற பொருட்கள் பள்ளியில் வைத்திருந்தால் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
* வேதியியல் ஆய்வுக் கூடத்துக்கு தேவையான வேதிப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எரிவாயு உருளையை சோதனைக் கூடத்துக்கு வெளியில் வைக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு அருகில் இதுபோன்ற பொருட்கள் வைக்க பள்ளித் தலைமை ஆசிரியர் அனுமதிக்க கூடாது.
* கழிவறையை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
* வேதிப் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பூட்டிய சீல் வைக்கப்பட்ட அறையில்தான் வைக்க வேண்டும்.
* பள்ளி கழிப்பறைகள் சுத்தமாக வைக்க வேண்டும். கழிப்பறையில் உடைந்த நிலையில் உள்ளவற்றை சரி செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வைக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் புதர், கற்குவியல்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மின் இணைப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும். மாணவர்கள் அருகில் செல்லாமல் கண்காணிக்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நிர்வாகத்தினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மெத்தனமாக நடந்து கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...