×

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது : இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயராகி வருவதால், அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கூட்டத்தொடர் குறித்தும், அமைதியாக அவையை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது: மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. 24 நாட்களில் மொத்தம் 18 அமர்வுகள் நடக்கிறது. தொடரில் 46 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதுபற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அவை சுமூகமாக கொண்டு செல்ல அனைத்துக் கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூட்டத்தில் பேசும் போது, ‘‘நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமான முறையில், அமைதியாக, நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்றம் முழுமையாக இயங்குவதைத்தான் பொதுமக்கள் விரும்புகிறார்கள். ஒட்டுமொத்த நாடும் இதைத்தான் விரும்புகிறது. தேசிய நலன் கொண்ட விவாதம் அங்கு நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக கூட்டு முயற்சி அடிப்படையில் நாடாளுமன்றம் அமைதியான முறையில் செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார். தேச நலன் கருதி அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் அரசு எதிர்பார்க்கிறது. மழைக்கால கூட்டத்தொடரை இதன் மூலம் ஆக்கப்பூர்வமானதாக நாம் மாற்ற வேண்டும். சட்டவிதிகளின்படி எந்த விவாதத்திற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றம் அமைதியாக நடைபெற எந்த தடைக்கல்லையும் அகற்ற மத்திய அரசு தயார்.  இதேபோல் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவை முடக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், நேற்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தயார்: மழைக்கால கூட்டத்தொடரில் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்டி மற்றும் எஸ்டி அமைப்பினருக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் வழங்க கேட்டும், பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் அப்பாவிகளை கொல்பவர்களை தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டம் கொண்டு வர கேட்டும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் புயல் கிளப்பி திட்டமிட்டுள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் கூறும்போது, ‘‘இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் அவையில் போராடுவோம். அரசு உறுதி அளிக்கும் வரை அவையை நாங்கள் நடத்த விடமாட்டோம்’’ என்றார்.

பாஜ கொறடா அனுராக் தாக்கூர்

மக்களவை பாஜ தலைமை கொறடாவாக அனுராக் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்புர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றி பெற்றவர். இதற்கு முன் மக்களவை தலைமை கொறடாவாக இருந்த ராகேஷ் சிங், தற்போது மத்தியப் பிரதேச பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொறடா அனுராக் தாக்கூர், பாஜ இளைஞர் அணியின் தேசிய தலைவராக உள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் தெலுங்கு தேசம் நோட்டீஸ்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. அக்கட்சியின் எம்.பி. சீனிவாஸ் கேசினேனி, மக்களவை செயலாளரிடம் இந்த நோட்டீசை அளித்துள்ளார். இன்றே இத்தீர்மானத்தை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் திரட்டி வருகின்றனர்.

ராகுல் கருத்து புயலை கிளப்பும்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி கடந்த வாரம் உபி மாநிலம் அசம்கார் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றச்சாட்டு முன் வைத்தார். எதிர்க்கட்சிகள் அவையில் அமளியை ஏற்படுத்தும்பட்சத்தில், ராகுல் கருத்து குறித்து அவையில் பிரச்னையை உருவாக்க பாஜ திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு எந்த கருத்தையும் ராகுல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும், அதை பாஜ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...