×

கர்நாடகாவில் இருந்து 1.20 லட்சம் கனஅடி திறப்பு 100 அடி எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர் : கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1.20 லட்சம்  கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கர்நாடக  மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த 17 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்  கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பியுள்ளது.  நேற்று மாலை நிலவரப்படி அணையில் 123.40 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு  விநாடிக்கு 71 ஆயிரத்து 667 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில்  இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் நேற்று மாலை  2,282.50 அடி தண்ணீர் இருந்தது.  தற்போது விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர்  வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 40 ஆயிரம் கன அடி நீர்   திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். மறறும் கபினி ஆகிய அணைகளில் இருந்து  தமிழகத்துக்கு விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வரும் 20ம் தேதி வரை மழை  நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்திற்கு  திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 80,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,07,064 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம் 87.92 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 95.73 அடியானது. நீர் இருப்பு 59.44 டிஎம்சி. மாலை 3 மணியளவில் 98 அடியை எட்டிய நீர்மட்டம் இரவு 8 மணி அளவில் 100 அடியாக உயர்ந்தது.

அணையின் 85 ஆண்டு கால வரலாற்றில் 100 அடியை எட்டுவது இது 64வது முறையாகும். இதேபோல் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அணைக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒகேனக்கல் காவிரியை பொறுத்தவரை நேற்று மாலை 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 1 லட்சம் கனஅடியானது. பிற்பகல் நிலவரப்படி 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியானது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்டவை முழுவதும் மூழ்கியுள்ளன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொங்கி பாயும் வெள்ளத்தால் நேற்று 8வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. மேலும், ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். 100க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் காவிரி கரையோரப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை முதல்வர் திறக்கிறார்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (19ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் வந்து நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் இரவு தங்குகிறார்.நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதல்வர் திறந்து விடுகிறார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க இருப்பதால், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

ஜூலை 19ம் தேதியன்று காவிரி ஆணையத்தின் 2வது கூட்டம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையை அதே தேதியில் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் வருகிறது. காவிரி ஆணையம் மூலமே அணை திறக்கப்பட வேண்டும். இந்த அறிவிப்பை கூட ஆணையம் தான் அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே டெல்லியில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொதுப் பணித்துறையின் செயலாளர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பாகி விடும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், ரெங்கநாதன் ஆகியோர் கூறியுள்ளனர். தற்போது குறுவை சாகுபடியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தண்ணீரை திறந்து விட்டால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கும். மேலும் பல்வேறு ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் 4 அல்லது 5 நாட்களுக்குள் முடிவடைந்து விடுமா என்பது தெரியவில்லை. முதல்வரின் அறிவிப்பு மூலம் தமிழகத்திற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து விடக் கூடாது என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்...