×

நீட் தேர்வு தொடர்பான மனு அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் மற்றும் மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளும் அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் புதிய தரவரிசை பட்டியலை தயாரிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனால், தமிழகம் உட்பட அகில இந்திய அளவில் ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஏற்கனவே, முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் சீட் பெற்ற சென்னையைச் சேர்ந்த சத்தியா என்ற மாணவன், புதிய தரவரிசை பட்டியலால் தனது சீட்டுக்கு பாதிப்பு வரக்கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று பரிசீலனைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாராசந்த் சர்மா ஆகியோர் இருவரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, தனது உத்தரவில், “நீட் தேர்வு தொடர்பான இரு மனுக்களும் அவசர வழக்காக 20ம் தேதி (நாளை மறுநாள்) விசாரிக்கப்படும்’’ என்றார். இதற்கிடையே, நீட் தேர்வின்போது 69 சதவீத இடஒதுக்கீடு என்ற முறைக்கு தடை விதித்து 50 சதவீதமாக உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை நேற்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் வாபஸ் பெற்றார்.

இதுகுறித்த மனுவை இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் பிரதான வழக்கோடு சேர்த்து விசாரிக்க இணை மனு தாக்கல் செய்து கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு மனுதாரருக்கு உத்தரவிட்டதால், அவர் இந்த மனுவை வாபஸ் பெற்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...