×

ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டம்: நாளை கூடுகிறது பார்லி...பிரச்னைகளை திசை திருப்புவதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வரை, 18 நாட்கள் நடக்கிறது. முன்னதாக, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு, அவையை சுமூகமாக நடத்திட அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களிடையே, அவையை சுமூகமாக நடத்துவது குறித்து பேசுகிறார். மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோர் கூட்டும் இரு கூட்டங்களிலும், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்கிடையே, ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியனின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

 நாளை சபை கூட உள்ள நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை, பல்வேறு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சந்தித்து, ஆளுங்கட்சிக்கு எதிராக நெருக்கடி கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். திரிணாமுல் கட்சி அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்பியை, துணை தலைவர் வேட்பாளராக களம் இறக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேபோல், அகாலி தளம் அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏதேனும் ஒரு கட்சியின் மூத்த எம்பியை, துணைத்தலைவர் பதவியில் களம் இறக்க ஆளும் பாஜ கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிஜூ ஜனதா தளம் மற்றும் அதிமுக கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட உள்ள முக்கிய பிரச்னைகள் வருமாறு:

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு அதிகரிப்பு, கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை, யுசிஜிக்கு எதிராக உயர்கல்வி ஆணையம் அமைத்தல், எஸ்சி - எஸ்டி இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் விவகாரம், வாட்ஸ் அப் தகவலால் கொலைகள், முத்  தலாக் சட்டம், தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளன. இருந்தும், கடந்த சில நாட்களாக, சசிதரூர் கூறிய இந்து - பாகிஸ்தான் விவகாரம், அதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் ஆண்களுக்கான கட்சி என்று பிரதமர் கூறியது போன்ற விவகாரங்களும் கூட்டத்ெதாடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை எழுப்பி, மற்ற பிரச்னைகளில் இருந்து ஆளும் பாஜ, திசை திருப்பும் வேலையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

நம்பிக்கையில்லா தீர்மானம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடுவின் ெதலுங்கு தேசம் கட்சி, கடந்த சில மாதங்களுக்கு முன், கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதற்கு, ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மற்றும் அந்தஸ்து வழங்கல் தொடர்பான பிரச்னை என்று கூறப்பட்டது. இந்த கட்சி வௌியேறியதால், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை பலத்தில் குறைவு ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தாலும், தெலுங்கு ேதசம் கட்சி, மத்திய அரசுக்கு எதிராக நடப்பு கூட்டத்தொடரில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...