×

பிரதமருக்கு ராகுல் காந்தி ஆதரவு கடிதம்: மகளிர் மசோதா நிறைவேற்றப்படுமா?...முலாயம், லாலு கட்சிகள் எதிர்ப்பு?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் 9ம் தேதி மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அதிகாரமளித்தலுக்கும் தீவிரமாகப் போராடி வருவதாக பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கூறியிருப்பதாவது: மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்கள் தங்களுக்குரிய சரியான பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும். இதற்காக வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, ஆளும் பாஜ அரசு நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் பங்கேற்கும் பல்வேறு கூட்டங்களில் மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்தும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பேசி வருகிறீர்கள். அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தி, அர்த்தம் உள்ளதாக்குங்கள். உங்களின் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றச் சரியான வழி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதுதான். அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம். எந்த விதமான தாமதமும் இல்லாமல், அடுத்த தேர்தலுக்கு இதைப் பயன்படுத்தாமல், மசோதாவை நிறைவேற்றுங்கள். கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் பாஜவின் முக்கிய வாக்குறுதியாக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளீர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மசோதாவுக்கு எதிர்ப்பு: கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி, மகளிர் மசோதா நிறைவேற்றல் தொடர்பான விவாதம் மக்களவைக்கு வந்தபோது, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்,  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும்,  பாஜவில் ஒரு சில தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். இதனால், மசோதா  நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. முன்னதாக, கடந்த 1996ம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்த போது, முதன்முறையாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ‘லோக்சபாவில் முழுபலத்தை பெற்ற நீங்கள், மகளிர் மசோதாவை நிறைவேற்றுங்கள்’ என்று கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை...