×

கடந்த 5 ஆண்டுகளில் கான்ட்ராக்ட் எடுத்து பணியே செய்யாமல் ரூ.2083 கோடி வரை ஸ்வாகா செய்த ஒப்பந்ததாரர்கள்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த  5 ஆண்டுகளில்  சாலை போடுவதாக ஒப்பந்தம் எடுத்து பணியே செய்யாமல் ரூ.2083 கோடிகளை  ஒப்பந்தகாரர்கள் ஆட்டையைப் போட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.  மேலும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் துணையோடு தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்காக நெடுஞ்சாலைத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை 4974 கி.மீ நீளமும்,  மாநில நெடுஞ்சாலைகள் 11,594 கி.மீ. நீளமும் ,  மாவட்ட முக்கிய சாலைகள் 11,289 கி.மீ நீளமும் , மாவட்ட இதர சாலைகள் ரூ.34,160 கி.மீ நீளங்கள் என மொத்தம் 62,017 கி.மீ நீளச்சாலைகள்  தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

 இந்த சாலைகளை , பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை செய்வதற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவை எடுத்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 2012ல் பொள்ளாச்சியிலுள்ள   பகுதியில் 375 கி.மீ சாலையை புதுப்பிக்க   ரூ.232 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கினர். அதே போல ரூ.1,010 கோடி செலவில் ராமநாதபுரம் கோட்டத்திலுள்ள 569 கி.மீ நீளச்சாலைகளையும், கிருஷ்ணகிரி கோட்டத்தில் 530 கி.மீ. நீள சாலைகளை ரூ.630 கோடி செலவில் புதுப்பிக்க ஒட்டு மொத்தமாக 780 கி.மீ நீள சாலை புதுப்பித்தல், பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் கோட்டத்தில் உள்ள 642 கி.மீ நீள சாலைகள் ரூ.611 கோடி செலவில் பராமரிப்பு மற்றும் புனரமைப்புக்கு இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விரைவில் பழனி கோட்டத்திலும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த ஒப்பந்தப் பணிகளை வெங்கடாசலபதி அன்கோ மற்றும் எஸ்பிகே ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த சாலைகளுக்கு புதுப்பிப்பது மற்றும் பராமரிப்பு பணிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ரூ.2083 கோடி வரை தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத நெடுஞ்சாலைத்துறை மூத்த அதிகாரி கூறியதாவது: அருப்புக்கோட்டையை சேர்ந்த எஸ்பிகே அன்கோ ஒப்பந்த நிறுவனம் மற்றும் மூத்த அமைச்சர் ஒருவரின் உறவினரின் ஒப்பந்த நிறுவனத்துடன் இணைந்து கொண்டு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர் கோட்டங்களை 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு டெண்டர் எடுத்துள்ளது. இதில், விருதுநகர் கோட்டத்தில் மட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை.

 மற்ற கோட்டங்களில் ஒப்பந்த நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது. பொதுவாக 8 கிலோ மீட்டர் நீள சாலையை 2 பேர் வீதம் 43 சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அதன் மூலம் 5 ஆண்டுகள் பராமரிப்பு பணி மேற்கொண்டாலும், ரூ.10 கோடி செலவில் சாலைகளை பராமரிக்க முடியும். இவர்கள் முறையாக பராமரிக்க ஒரு கோட்டத்திற்கு ரூ.100 கோடி செலவு செய்தாலும் மொத்தம் 5 கோட்டத்திற்கு ரூ.500 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், ரூ.2083 கோடி வரை தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மீதமுள்ள ரூ.2083 கோடி தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு கோட்டத்திற்கும் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை அந்த ஒப்பந்த நிறுவனம் பணியே செய்யாமல் பங்கீட்டு கொள்ளும் வகையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ள சம்பவம் இப்போது ஐ.டி.ரெய்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆயிரக் கணக்கான  கோடிகளில் நடக்கும் அரசு ஒப்பந்தப்பணிகள் அனைத்தும் இது போன்று தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்...