×

லீட்ஸில் இன்று கடைசி ஒருநாள் போட்டி இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை

லீட்ஸ்,: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று  மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற  கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன.  நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, லண்டன் லார்ட்ஸ்  மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து 86 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

323 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 50 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் அனுபவ விக்கெட்  கீப்பரும் முன்னாள் கேப்டனுமான டோனி 10,000 ரன் மற்றும் 300வது கேட்ச் என இரண்டு சாதனை மைல்கல்லை எட்டினாலும், அதிரடியில்  இறங்காமல் ஆமை வேகத்தில் பேட் செய்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. டோனிக்கு ஆதரவாக கேப்டன் கோஹ்லி கருத்து தெரிவித்த  நிலையில், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும்  நல்ல பார்மில் இருந்தாலும், அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

புவனேஷ்வர், பூம்ரா இல்லாமல் வேகப்பந்துவீச்சும் அவ்வளவாக எடுபடவில்லை. சித்தார்த், உமேஷ், ஹர்திக் கூட்டணி 2வது போட்டியின் கடைசி  கட்டத்தில் மிக மோசமாக செயல்பட்டது. இங்கிலாந்து கடைசி 8 ஓவரில் மட்டும் 82 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவ் - யஜுவேந்திர  சாஹல் சுழல் கூட்டணி மட்டுமே இந்திய அணியின் துருப்புச்சீட்டாக விளங்குகிறது. இவர்களின் மணிக்கட்டு சுழல் மாயாஜாலம் நிகழ்த்தினால் தான்  இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடியும். அதே சமயம், இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ராய், பேர்ஸ்டோ, ரூட்,  கேப்டன் மோர்கன் ஆகியோர் சிறப்பான பார்மில் இருப்பது, இந்திய பவுலர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சின் அதிரடி ஆட்டம் கை கொடுக்கவில்லை என்றாலும், 8வது வீரராகக் களமிறங்கிய டேவிட் வில்லி 31 பந்தில் அரை  சதம் அடித்தது, இங்கிலாந்து அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. பந்துவீச்சிலும் பிளங்கெட், வில்லி, ஸ்டோக்ஸ், மொயீன், ரஷித் ஆகியோர்  அபாரமாக செயல்பட்டுள்ளனர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, லீட்ஸில் இன்று நடக்கும் கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற  கடும் போட்டி நிலவுகிறது. ஐசிசி தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இந்த போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடைசி  வரை விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதிக்கம் தொடருமா?
* லா2011க்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர் எதிலும் இந்திய அணி தோற்றது இல்லை. அந்த  பெருமையை இந்தியா தக்கவைக்குமா என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 17  போட்டிகளில் இந்தியா 10ல் வென்றுள்ளது.
* லார்ட்ஸ் போட்டியில் வென்றதால் நம்பர் 1 அந்தஸ்தை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும், 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா  வெற்றி பெற்றால் இரு அணிகளுக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் குறையும்.
* லா2016 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-4 என்ற கணக்கில் தோற்ற இந்தியா, அதன் பிறகு விளையாடிய அனைத்து இருதரப்பு ஒருநாள்  தொடர்களிலும் வென்றுள்ளது. இந்த காலகட்டத்தில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து (2 முறை), இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை (2 முறை),  ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிராக இந்திய அணி தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணிகள்
இந்தியா: கோஹ்லி (கேப்டன்), தவான், ராகுல், ரோகித், ரெய்னா, கார்த்திக், டோனி, ஹர்திக், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் பட்டேல், குல்தீப், சாஹல்,  சித்தார்த், புவனேஷ்வர், உமேஷ், ஷர்துல் தாக்கூர்.

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), மொயீன், ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜேக் பால், பட்லர், டாம் கரன், ஹேல்ஸ், பிளங்கெட், ஜோ ரூட், அடில் ரஷித்,  பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...