×

காவிரியில் மாசு பற்றி 2வது அறிக்கை தாக்கல் தமிழக, கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் மாசு கலப்பது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று தாக்கல்  செய்த 2வது அறிக்கை தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழகம், மற்றும் கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரில் அதிகப்படியான கழிவுகள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருக்கும்  விளைநிலங்கள் பாதிப்படைந்து பயிர் செய்வதற்கு ஏற்றவாறு இல்லாமல் வீணாகிறது என்றும், அதனால் பயிர் நஷ்ட ஈடாக கர்நாடகா  மாநிலத்திடமிருந்து ரூ2 ஆயிரத்து 480 கோடியை பெற்று தர வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உண்மை நிலை குறித்து முதல்  அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மாசு இருப்பது உண்ைம என்று கூறியிருந்தது.

இதையடுத்து கோடைக்காலத்தில் ஒருமுறை காவிரி நீர் குறித்து ஆய்வு நடத்தி அதனை ஜூலை மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய  வேண்டும் என கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2வது அறிக்கையை தாக்கல் செய்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில்,  ‘காவிரியின் பிரதான பகுதியில் கழிவுநீர் கலக்கவில்லை. அதன் துணை ஆறு அக்ராவதியில் கழிவு கலப்பதால்தான் காவிரி மாசடைந்துள்ளது.  இதேபோல் தென்பெண்ணை ஆற்றிலும் நீர் மிகவும் மாசாக உள்ளது. எனவே இதனை தடுக்க கர்நாடகா அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்’ என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து,  “மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள 2வது அறிக்கை குறித்து தமிழகம், கர்நாடகா 2  வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...