×

நீட் மதிப்பெண் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு

புதுடெல்லி : நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட மொழிமாற்று பிரச்னையின் காரணத்தால் 49 கேள்விகளுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க  வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நடந்தது. இந்த தேர்வை தமிழகத்தில் 1,07,288 பேர் உள்பட நாடு முழுவதும் 13 லட்சத்து 26  ஆயிரத்து 725 எழுதினர். இதில் தமிழில் எழுத மட்டும் 24 ஆயிரத்து 72 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49  கேள்விகள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை குறித்து  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில்,” நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு  தலா 4 மதிப்பெண்கள் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த  நீதிமன்றம்,”சிபிஎஸ்இ நிர்வாகம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா? எனக்கேள்வி எழுப்பியதோடு, பிழையாக கேட்கப்பட்ட 49  கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறும், அதேப்போல் அடுத்த 2  வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர்  சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

இதையடுத்து நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக எம்பி.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து தமிழகம்  உட்பட அகில இந்திய அளவில் ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசு  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,” நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்னை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆங்கிலத்தின் வினாக்கள் முறையே  இறுதியானது என்பதால் அதனை தான் மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாணவர்களும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அப்படி இருக்கையில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள் மொழிமாற்றம்  தொடர்பாக எப்படி 196 கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும். மேலும் இதில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில்  தற்போது புதிய தரவரிசை பட்டியல் தயார் செய்து வெளியிடும் பட்சத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மாணவர்கள் பாதிப்படைவார்கள்  என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த  நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனியஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் தாக்கல் செய்துள்ள கேவியட்  மனு ஆகிய இரண்டையும் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...