×

நெடுஞ்சாலைத்துறையில் ரூ7,940 கோடி டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர் வீடு, ஆபீசில் ஐ.டி. ரெய்டு : ரூ180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல்

* இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு தொடர்பு


சென்னை : தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ரூ7,940 கோடிக்கு டெண்டர் எடுத்த எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும்  அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 30க்கும் ேமற்பட்ட இடங்களில் ேநற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை  நடத்தினர். இந்த சோதனையில் பல ஆயிரம் ேகாடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூட்டை மூட்டையாக ரூ2 ஆயிரம் நோட்டுகள் கொண்ட ரூ180  கோடி பணம், 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையில் புதிய சாலைகள் அமைப்பது, பழைய சாலைகளை பராமரிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களை அருப்புக்கோட்டையைச்  சேர்ந்த எஸ்.பி.கே அண்ட் கோ என்ற நிறுவனம் எடுத்து செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக செய்யாதுரை என்பவர் உள்ளார்.  இவருக்கு சென்னையில் பாரிமுனை, தி.நகர், அபிராமபுரம், போயஸ் கார்டன், அண்ணாநகர், மதுரை, கோவை, அருப்புக்கோட்டை, திருச்சி உட்பட  தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

சென்னையில் உள்ள அலுவலகத்தை அவரது 2வது மகன் நாகராஜ் கவனித்து வருகிறார். எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் கிரஷர்கள்,  குவாரிகள், ஸ்பின்னிங் மில் என பல்வேறு துணை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனை செய்யாதுரை மகன்களான கருப்புசாமி, நாகராஜ்,  ஈஸ்வரன், பாலுசுப்பிரமணியன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். இதில் நாகராஜ் தான், தமிழக நெடுஞ்சாலை துறையில் உள்ள அனைத்து ஒப்பந்த  பணிகளையும் கவனித்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ேமல்முடிமன்னார் கோட்டை பகுதியில் ஆடு வெட்டும்  தொழிலை தான் செய்யாதுரை ெசய்து வந்தார். நாளடைவில், செய்யாதுரைக்கு ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர்கள் இரண்டு ேபரின் நட்பு  கிடைத்தது. அதன்பிறகு, படிப்படியாக அமைச்சர்களின் பரிந்துரைப்படி நெடுஞ்சாலைத்துறையில் சிறிய சிறிய ஒப்பந்தங்களை பெற்று செய்யாதுரை  பணிகளை செய்து வந்தார். பிறகு, கடந்த 7 ஆண்டுகளாக தமிழக நெடுஞ்சாலை துறையில் பல நூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை தங்கள்  அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பணிகளை செய்து வந்தார்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகளை பராமரித்தல் போன்ற பணிகளை  ஒப்பந்தம் எடுத்து பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி வருகிறார். செய்யாதுரையின் மூத்த மகன் அருப்புகோட்டையில் உள்ள குவாரிகள் மற்றும்  அலுவலக பணிகளை கவனித்து வருகிறார். 3வது மகன் ஈஸ்வரன் கோவையில் தங்கி ஸ்பின்னிங் மில் தொழிற்சாலைகளை கவனித்து வருகிறார்.  நான்காவது மகன் பாலசுப்பிரமணியன் சாலைகள் அமைக்க ேதவையான கற்களை சப்ளை செய்யும் கிரஷர் நிறுவனம் மற்றும் குவாரிகளும் நடத்தி  வருகிறார். தொடர் பணிகளால் நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 7 ஆண்டுகளாக எஸ்பிகே அண்ட் கோ நிறுவனம் தனது ஆதிக்கத்தை செலுத்தி  வருகிறது. இதனால், 2 மூத்த அமைச்சர்களின் ஆதரவாளர் செய்யாதுரை மற்றும் அவரது இரண்டாவது மகன் நாகராஜ் நெடுஞ்சாலை துறையில்  அசைக்க முடியாத நபர்களாக உள்ளனர்.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையில் சேகர் ரெட்டி சிக்கியதால், 2017ம் ஆண்டு மதுரையில் ரூ200 கோடிக்கு புதிய சாலைகள் போடும்  ஒப்பந்தத்தை செய்யாதுரையிடம் சேகர் ரெட்டி ஒப்படைத்தார். அதன்படி, செய்யாதுரை நிறுவனம் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் ரூ5000  கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை எடுத்து பணிகளை செய்து வருகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்யாதுரை தனது நண்பர்களான சுந்தர்ராஜ்  மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ேசர்ந்து எஸ்பி அண்ட் கோ என்ற பெயரில் தான் நிறுவனத்தை தொடங்கினார். பிறகு, ஆளுங்கட்சியின் 2  மூத்த அமைச்சர்களின் நெருக்கம் கிடைத்த உடன் செய்யாதுரை தனது நண்பர்களான சுந்தர்ராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை படிப்படியாக நீக்கிவிட்டு  தனியாக எஸ்பிகே அண்ட் கோ என்ற நிறுவனத்தை தொடங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் தனியாக ஒப்பந்தம் எடுத்து தமிழகம் முழுவதும் சாலை  பணிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் எஸ்பிகே அண்ட் கோ நிறுவனம் சார்பில் போடப்பட்ட புதிய சாலைகள் மற்றும் பழைய  பராமரிப்பு சாலைகள் அனைத்தும் தரம் குறைந்த சாலைகளாக போடப்பட்டுள்ளதாகவும், எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள்  என்ற பெயரில் பல போலி நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் நெடுஞ்சாலைத்துறையில் பணிகள் பெற்று பல நூறு கோடி ரூபாய் மத்திய அரசுக்கு  வரிஏய்ப்பு ெசய்தாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, மதுரை,  அருப்புக்கோட்டை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 30க்கும் ேமற்பட்ட இடங்களில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் வருமான வரித்துறை  அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் பெற்று புதிய சாலைகள் போடாமல், சாலைகள் போட்டது ேபான்று அதிகாரிகள் துணையுடன்  முறைகேடாக அரசிடம் பணம் பெற்றதற்கான ஆவணங்கள், போலி நிறுவனங்கள் மூலம் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் பெற்றதற்கான  ஆவணங்கள், பினாமிகள் பெயரில் பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள், வெளிநாட்டில் முதலீடு  செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தின் பல வங்கி  கணக்குகள், செய்யாதுரையின் வங்கி கணக்குகள், அவரது 4 மகன்களின் வங்கி கணக்குகள் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை  அதிகாரிகள் பெற்று சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று நடத்தப்பட்ட  ேசாதனையில் ரூ2000 நோட்டுகள் கொண்ட ரூ180 கோடி ரொக்க பணம் கட்டுக்கட்டாக  சிக்கியது.

கைப்பற்றப்பட்ட பணத்தை, இயந்திரத்தின் உதவியுடன் எண்ணும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ேநற்று இரவு வரை ஈடுபட்டனர்.  நாகராஜனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து 150 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 100 கிலோ தங்க நகைகள்  சென்னை சேத்துப்பட்டில் உள்ள நாகராஜுக்கு நெருக் கமானவரின் பங்களாவில் நேற்று சிக்கியது. இந்த நகைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 2  பிரபல நகை கடைகளில் வாங்கப்பட்டவை. நேற்று கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்களை வருமான  வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை இன்றும் நீடிக்கும் என்று வருமான வரித்துறை  அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவரது நான்கு  மகன்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சோதனையில், 2 மூத்த அமைச்சர்கள், தமிழக   நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவண பட்டியலும், அதற்கான வங்கி  கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் விரைவில் விசாரணை நடத்தவும், சோதனை நடத்துவதற்கான வாய்ப்பு  உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுங்கட்சி மூத்த அமைச்சர்கள் முதல் நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகள் வரை அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். தமிழக சத்துணவு திட்டத்திற்கு முட்டை, சத்துமாவு, பருப்பு விநியோக செய்யும் கிறிஸ்டி புட்ஸ்  நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மும்பை, உத்தரப்பிரேதேசம் என நாடு  முழுவதும் 116 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.18 கோடி பணம், 10 கிலோ தங்கம்  கைப்பற்றப்பட்டது. 5 நாள் தொடர் சோதனையில் மத்திய அரசுக்கு ரூ.1,353 கோடி வரி வாய்ப்பு செய்தது  உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை   தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்ததில் பல ஆயிரம் கோடி முறைகேடு ஆவணங்கள் சிக்கியுள்ள சம்பவம் தமிழக  அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திமுக
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர்கள் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு  தான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாகவும். இதனால் தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக தமிழக  கவர்னரை சந்தித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த புகாரின் படி  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனத்தின் அதிபர் தியாகராஜன் என்பவர் வீடு  மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடுக்கான ஆவணங்கள்  மற்றும் அமைச்சர்களின் தொடர்புகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் குறித்த ஆவணங்களும் சிக்கியது.

அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் கொடுக்கும் ஒப்பந்ததாரர் மகன்
நெடுஞ்சாலை துறையில் புதிய அதிகாரிகளை நியமிக்கும் இடத்தில் ெசய்யாதுரையின் 2வது மகன் நாகராஜ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் பெற ேவண்டும் என்றால் செய்யாதுரை மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் தான் அதிகாரிகளை பார்த்து ஒப்பந்தம்  பெறுவார்கள். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக அமைச்சர்களின் நெருக்கத்தால் அதிகாரிகள் எஸ்பிகே&கோ நிறுவனத்தில் உரிமையாளர்களில் ஒருவரான  நாகராஜை பார்க்க நேரம் கேட்டு சந்திக்கும் நிலைமை தற்ேபாது உள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறையில் அதிகாரிகள் தங்களுக்கான பணி  இடமாறுதல் மற்றும் பதிவு உயர்வுகள் கிடைக்க வேண்டும் என்றால் நாகராஜை சந்தித்து மனு கொடுத்தால் ஒரு மாதத்தில் சம்பத்தப்பட்ட  அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கிடைத்துவிடும். அந்த அளவுக்கு அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் அவர் இருந்து  வருகிறார்.

நடிகைகள், அமைச்சர்கள் மகன்களுடன் இசிஆரில் வாராவாரம் பார்ட்டி
எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தின் முக்கிய நபராக செய்யாதுரையின் இரண்டாவது மகன் நாகராஜ். இவர் சென்னையில் தங்கி பணிகளை கவனித்து  வருகிறார். தமிழக மூத்த அமைச்சர்கள் மகன்கள் மூலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களில் கிழக்கு  கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் நாகராஜ் அனைவருக்கும் மது விருந்து அளிப்பது வழக்கம். அப்படி அளிக்கும் விருந்தில் முன்னணி  நடிகைகள் முதல் நடிகர்கள் வரை கலந்து கொள்வார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர்களின் மகன்களை நாகராஜ் தன் கையில் வைத்து கொண்டு,  தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள ஒப்பந்தங்களை தங்கள் நிறுவனத்திற்கு பெற்று வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வாரமும் மது பார்ட்டிக்காக  கோடிகள் வரை நாகராஜ்  செலவுகள் செய்து வந்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் அதிரடி
மதுரை, விருதுநகரில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் 16 பேர் கொண்ட குழுவினர், அருப்புக்கோட்டையிலுள்ள நாகராஜன் வீட்டில் அதிரடி  சோதனை நடத்தினர். மாடியிலுள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. தவிர கல்குறிச்சி ரோட்டிலுள்ள இவர்களுக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில்லிலும்  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மதியத்துக்கு மேல், செய்யாத்துரை மகன் கருப்பசாமியை அழைத்துக்கொண்டு, அருப்புக்கோட்டையில்  உள்ள 3 வங்கிகளில், அவர்களது கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி  உள்ளனர்.மதுரை கே.கே.நகர் வண்டியூர் பூங்கா ரோட்டில் எஸ்பிகே பெயரில் லாட்ஜ் மற்றும் ஓட்டல் இருக்கிறது. இங்கும் நேற்று ஐடி அதிகாரிகள்  சோதனை நடத்தினர். மேலும், ரூ200 கோடி மதிப்பிலான உத்தங்குடி - கப்பலூர் ரிங்ரோடு விரிவாக்கப் பணியை எஸ்பிகே நிர்வாகமே செய்து  வருகிறது. இதற்கான அலுவலகம் ரிங்ரோட்டில் திருமங்கலம் சூரக்குண்டு சம்பக்குளம் பகுதியில் இருக்கிறது. இங்கும், திருமங்கலம் அருகில்  நெடுங்குளம் கல்லணை கல்குவாரியிலும், நேற்று ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

ரூ582 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் நிறுத்தம்
விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ582 கோடி மதிப்பீட்டில், சுமார் 641 கிமீ தூரத்திற்கு, 19 சாலைகள் அமைக்க ஒப்பந்தம்  கையெழுத்தாகி உள்ளது. எஸ்பிகே நிறுவனம் பெற்றுள்ள இந்த சாலைப்பணிகள் நேற்று துவங்குவதாக இருந்தது. திருவில்லிபுத்தூர் - பார்த்திபனூர்  சாலை, 33வது மைல்கல்லில் நேற்று காலை 8 மணிக்கு சாலைப்பணிக்கான பூஜைக்காக கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட  பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் ஆகியோர், காலை 8 மணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், வருமான வரித்துறை சோதனையை  தொடர்ந்து, இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் கிடைத்த ரூ19 கோடி
வருமான வரித்துறையின் சோதனையில் நாகராஜின் உதவியாளர் ஒருவரின் கிராமத்து வீட்டில் இருந்த தண்ணீரில்லா கிணற்றில் பதுக்கி  வைக்கப்பட்டிருந்த ரூ19 கோடி மதிப்புள்ள ரூ2000 கரன்சி நோட்டுகள் சிக்கியது. பணத்தை பதுக்குவதற்காகவே குறைவான ஆழத்தில் இந்த கிணற்றை  தோண்டியது விசாரணையில் தெரியவந்தது.

2 ஆண்டுகளில் ரூ7940 கோடிக்கு டெண்டர்
1. எஸ்பிகே அண்ட் கோ நிறுவனம் பொள்ளாச்சி, ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ₹550 கோடி  வீதம் 5 ஆண்டுகளுக்கு சாலை கான்ட்ராக்ட் எடுத்துள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் சாலை பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். இதற்காக அவர்கள்  டோல்கேட் அமைத்துக் கொள்ளலாம்.
2. ரூ400 கோடியில் வண்டலூர் முதல் வாலாஜா(காஞ்சிபுரம் மாவட்டம்) வரையிலான சாலை பணி.
3. ரூ270 கோடியில் கன்னியாகுமரியில் கிழக்கு கடற்கரை சாலை திட்டம்.
4. ரூ400 கோடியில் தென்காசி-திருநெல்வேலி சாலை.
5. ரூ300 கோடியில் மதுரை ரிங் ரோடு.

பல கோடி இழப்பு
திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு 45.64 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு டெண்டர்  விடப்பட்டது. இந்த டெண்டரின் மதிப்பு ரூ407 கோடி மட்டுமே. ஆனால், ரூ720 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு தனது  பங்காக ரூ179.94 கோடியை வழங்குகிறது. இதனால், இரு தொகையை கூட்டினால் ரூ899.94க்கு டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த டெண்டர் மூலம் மட்டுமே அரசுக்கு ரூ492.18 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த டெண்டரை செய்யாதுரையின் மகன் நாகராஜின்  எஸ்பிகே அண்ட் கோ, வெங்கடாசலபதி அண்ட் கோ ஆகிய 2 நிறுவனங்கள் சேர்ந்து எடுத்துள்ளது. அதில் வெங்கடாச்சலபதி அண்ட் கோ என்ற  நிறுவனம் ஈரோட்டை சேர்ந்த சுப்பிரணியத்துக்கு சொந்தமானது. இந்த சாலையை போட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு டோல்கேட் அமைத்து இருவரும்  சேர்ந்து வசூலிக்கலாம்.

அதேபோல மதுரை சுற்று வட்டச்சாலை அமைக்கும் பணிக்கு ரூ200 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில் அரசு உடனடியாக ரூ80 கோடியை  விடுவித்துள்ளது. இந்த டெண்டரை பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் செய்யாதுரை  நாகராஜன், சுப்பிரமணியன், சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த சாலை அமைக்கப்பட்ட பிறகு டோல்கேட் அமைத்து 18  ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வண்டலூரில் இருந்து வாலாஜா வரை ஆறு வழிச்சாலை அமைக்க  ரூ200 கோடிக்கு எஸ்பிகே அண்ட் கோ நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. அதேபோல, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர்,  ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாலை பணிக்கு ரூ2750 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை செய்யாதுரை நாகராஜன்,  சுப்பிரமணியம் ஆகியோர் எடுத்துள்ளனர். இந்த 5 இடங்களில் அமைக்கப்படும் சாலைகளில் அமைக்கப்படும் டோல்கேட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு  கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...