×

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக பிரதிநிதிகள் நியமனம்

பெங்களூரு: காவிரி ஆணையத்துக்கு இதுவரை பிரதிநிதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்த கர்நாடகா அரசு, மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் வழிக்கு வந்துள்ளது. ஆணையத்திற்கான பிரதிநிதிகளை அம்மாநில அரசு நேற்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதற்கு அனைத்து மாநிலமும் உறுப்பினர்களை நியமித்து விட்ட நிலையில் கர்நாடக மாநிலம் மட்டும் அறிவிக்காததால் அது மாநிலத்திற்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதால் நேற்று முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், துணைமுதல்வர் பரமேஸ்வர், மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சிவகுமார் கூறியதாவது:

காவிரி ஆணையத்தை மத்திய அரசு இரவோடு இரவாக அமைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சட்ட ரீதியாக போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதிகள் மட்டும் நியமிக்கப்படவில்லை. காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் முதல் கூட்டம் விரைவில் நடைபெறும். அக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை என்றால் அது நமக்கு பாதகமாகும். எனவே, காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தலைமை வக்கீல் உள்பட சட்ட நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். அதை தொடர்ந்து உறுப்பினராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்தோம்.
காவிரி ஆணையத்தின் கர்நாடக மாநில பிரதிநிதியாக மாநில நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங்கும், காவிரி ஆணைய ஒழுங்காற்று குழுவில் மாநிலத்தின் பிரதிநிதியாக காவிரி நீர்ப்பாசன கழகத்தின் நிர்வாக இயக்குநர்  பிரசன்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மதிக்கவேண்டும் என்பதால் மாநில அரசின் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில், மத்திய அரசு மாநிலத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். இந்நிலையில், காவிரி ஆணையத்துக்கு அனைத்து மாநில பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுவிட்டதால், ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் 2ம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது