×

இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை ரயில், வாகன போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மும்பை மற்றும் தானே மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடாது பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வாகன போக்குவரத்தும், ரயில் பாதையில் தேங்கிய வெள்ளத்தால் புறநகர் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து நேற்று வரை கனமழை கொட்டியது. நேற்று முன்தினம் மாலையில் தென் மும்பையில் மழை காரணமாக பேஷன் தெருவில் மரம் ஒன்று விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். நேற்று பெய்ததொடர் மழை காரணமாக மேற்கு ரயில்வே வழித்தடத்தில் வெளிச்சம் குறைவு காரணமாகவும், பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

தொடர் மழை காரணமாக மும்பையில் கார் ரோடு, மலாட், அந்தேரி சப்வே, மிலன் சப்வே போன்ற பகுதிகளை மழை சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சயான், பவாய், செம்பூர், சாந்தாகுரூஸ், மற்றும் குர்லாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டன. சாந்தாகுரூஸ்-செம்பூர் இணைப்பு சாலையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். தாதர் டிடி, பரேல் சந்திப்பு, மாகிம் போன்ற இடங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் தண்ணீரில் தத்தளித்தபடி வாகனங்கள் சென்றன.போக்குவரத்து பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு டிவிட்டர் மற்றும் வானொலிகள் மூலம் மழை மற்றும் வாகன போக்குவரத்து குறித்து அடிக்கடி தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு  உதவிய போலீசார்

மழையின் போது வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் தேவையான உதவிகளை செய்தனர்,  மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, எஸ்.வி.ரோடு, இணைப்பு சாலை போன்றவற்றிலும் போலீசார் போதிய அளவு நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆங்காங்கே மழை காரணமாக விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும் தீயணைப்பு படையினரும் விரைந்து செயல்பட்டு அகற்றினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...