×

மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் தென்தமிழக கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

சென்னை: தமிழக மீனவர்கள் இன்று தென்தமிழக கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வந்த நிலையில், கடந்த 3 தினங்களாக வெப்பம் தணிந்துள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமையில் இருந்து நேற்று வரை சென்னையில் 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் அடித்தது. நேற்று சென்னையில் 97 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதேபோல் பிற மாவட்டங்களிலும் நேற்று வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 107 டிகிரி வரை வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று அங்கு 99 டிகிரி மட்டுமே வெயில் பதிவானது. இருப்பினும், நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இதற்கிடையில், பருவமழை தாக்கம் குறைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சிமலையொட்டியுள்ள பகுதிகளில் மழையும் குறைந்துள்ளது.

இந்த நிலையில், தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும், அதிகபட்சம் 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவே, மீனவர்கள் யாரும் தென்தமிழக கடல் பகுதிக்கு இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடற்பகுதியில் 3 முதல் 3.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் உயர்ந்து காணப்படும். கடல் பலத்த கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று காலை முதல் பல இடங்களில் கடலில் பலத்த காற்று வீசியது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை