×

கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கல்லூரிகளில் 2011-12ம் கல்வியாண்டு முதல் 2017-18ம் கல்வியாண்டு வரை 1232 புதிய பாடப்பிரிவுகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் அதிகளவில் பாடப்பிரிவுகளை தெரிவு செய்வதற்கு ஏற்றவாறும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் பெற ஏதுவாக முதல்வர் கடந்த 1ம் தேதி சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் 2018-19ம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்த பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்காக அரசுக்கு தொடரும் செலவினமாக ரூ.68 கோடியே 46 லட்சம் ஏற்படும் என்றும் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.62 கோடியே 75 லட்சம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19ம் கல்வியாண்டில் இருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பி.எச்.டி.  ஆக மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதற்கும், இந்த பாடப்பிரிவுகளை கையாளுவதற்கான 693 உதவி பேராசிரியர் பணியிடங்களில் முதலாம் ஆண்டிற்கு 270 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் அதற்கென ரூ.26,39,73,840 நிதி ஒப்பளிப்பு வழங்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் இன்று அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 9ம் தேதி ஆகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 264 பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள் அடங்கிய மேற்காணும் அரசாணையை தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) உயர்கல்வி துறையின் கீழ் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...