×

திருமண உதவித்தொகை கோரி கணவருடன் புதுப்பெண் தர்ணா போராட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் திருமண உதவித்தொகை வழங்காததை கண்டித்து புதுமணப்பெண், தனது கணவருடன் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியை சேர்ந்தவர் மாரிச்செல்வி. இவரது தந்தை இறந்து விட்டார். இவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மாரிச்செல்விக்கும் எட்டயபுரம் மேலரதவீதியைச் சேர்ந்த முத்தரசு மகன் ரூபன் சக்கரவர்த்திக்கும் கடந்த 22ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னதாக தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின்கீழ் உதவித்தொகை கேட்டு கடந்த 18ம் தேதி இ-சேவை மையம் மூலம் மாரிச்செல்வி விண்ணப்பம் செய்தார். விண்ணப்பம் தொடர்பாக எந்தவித ஆய்வும் செய்யாமல், திருமண உதவித்தொகை பெறுவதற்கு 72 ஆயிரம் ஆண்டு வருமானம் என்பதற்கு பதிலாக 76 ஆயிரம் ஆண்டு வருமானம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், இவருக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இதனால் ஆய்வின் அடிப்படையில் வருமான சான்றிதழ் வழங்கக்கோரி நேற்று மதியம் கோவில்பட்டி ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு தனது கணவர் ரூபன் சக்கரவர்த்தியுடன் சென்ற மாரிச்செல்வி ஆர்.டி.ஓ.விமலா முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து மாரிச்செல்வி தனது மனுவை ஆர்.டி.ஓ.விமலாவிடம்  அளித்தார். மனுவை பெற்று கொண்ட அவர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...