×

ராமேஸ்வரம் அருகே செப்டிக் டேங்க் அமைக்க தோண்டியபோது துப்பாக்கி தோட்டா, வெடிகுண்டு குவியல் சிக்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க தோண்டியபோது வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை அருகே வசிப்பவர் எடிசன். இவரது வீட்டு தோட்டத்தில் நேற்று செப்டிக் டேங்க் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மண்வெட்டி, கடப்பாரை கொண்டு 4 அடி ஆழம் தோண்டியபோது, மண்ணில் வெடிகுண்டுகள் தென்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் எடிசனிடம் கூறினர். அவர், ராமேஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார், தோண்டும் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது ராணுவத்தில் பயன்படுத்தும் கையெறி குண்டுகள், ஏகே 47, எல்எம்ஜி துப்பாக்கி ரகங்களில் பயன்படுத்தும் தோட்டாக்கள், டெட்டனேட்டர் வெடிக்க பயன்படுத்தக்கூடிய பாக்ஸ், வயர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்பகுதியில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தோண்டும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘1980களில் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் பல்வேறு இடங்களிலும் இலங்கை போராளிகள் முகாம் அமைத்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்த காலக்கட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போராளி இயக்கத்தினரால் புதைத்து வைக்கப்பட்டது. தற்போது கண்டெடுக்கப்பட்டது ஈபிஆர்எல்எப் இயக்கம் 1986ல் புதைத்து வைத்திருந்தவை ’’ என்றனர்.

தோண்டத்தோண்ட கிடைத்த பொருட்கள் தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் விபரம்:

சிறிய எல்என்ஜி துப்பாக்கி 250 ரவைகள் ெகாண்ட 22 பெட்டிகள், எஸ்எல்ஆர் துப்பாக்கி 250 ரவைகள் கொண்ட 9 பெட்டிகள், இயந்திர துப்பாக்கி 100 ரவைகள் கொண்ட 4 பெட்டிகள், கையெறி குண்டுகள் - 15, கடலில் வெடிக்க பயன்படுத்தும் கண்ணி வெடிகள் - 5, பர்ஸ்ட் ஸ்டார்ட் குண்டுகள் - 3, டெட்டனேட்டரை வெடிக்க செய்யும் சிலாப் - 201, டெட்டனேட்டரை வெடிக்க செய்யும் இணைப்பு வயர் - 8 ரோல், சிறிய ஜெனரேட்டர் மோட்டார் - 1. இந்த வெடிபொருட்களில் பாதியளவு துருப்பிடித்து வீரியம் குறைந்த நிலையிலும், பெரும்பாலான பொருட்கள் நல்ல நிலையிலும் இருந்தன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி