×

விதானசவுதாவில் அதிகாரிகளுடன் ஆலோசனை விரைவில் விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் குமாரசாமி உறுதி

பெங்களூரு: விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யபட்டால் அதன் பயன் விவசாயிகளுக்கு எப்படி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் விரைவில் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.  மாநிலத்தில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக கூட்டுறவு வங்கிகளின் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்களுடன் முதல்வர் குமாரசாமி நேற்று விதானசவுதாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசும்போது, விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் வங்கி அதிகாரிகள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது.இந்த அரசு எத்தனை நாள் நீடிக்கும் என்பது போன்ற பாவனையும் சிலரிடம் உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா? என்பது போலவும் அதிகாரிகள் பேசி வருகிறார்கள். முதல்வர் பதவியில் யாருடைய தயவிலும் நான் இருக்கவில்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கு தேவைப்படும் நிதியை எப்படி பெறமுடியும்? நிதி நிலைமையை எப்படி சமாளிக்கவேண்டும் என்கிற வித்தையும் எனக்கு தெரியும்.

விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் எனக்கு கமிஷன் கிடைக்காது. இதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தேன். அதன்படி தற்போது கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நிதி மூலங்களை எப்படி கண்டு பிடிப்பது என்பதையும் நான் அறிவேன். 20 மாதம் முதல்வராக இருந்த அனுபவம் எனக்கு அதை கற்று தந்துள்ளது. முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்ட பின்பும் விவசாய கடன் தள்ளுபடி குறித்து எதுவும் செய்யமுடியவில்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் யாருக்கு கமிஷன் கிடைக்கும் என்பதும் எனக்கு நன்றாக தெரியும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த அரசு இருக்குமா? இல்லையா என்பது தெரியாது.எனவே, கடன் தள்ளுபடி விவகாரத்தில் இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். வங்கி அதிகாரிகளுக்கும்  இவ்வாறு தவறான தகவல்களை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் தவறாகும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்ளவே விரும்புவேன். அதுபோல்தான் இதுவரை நடந்து கொண்டும் வருகிறேன். பட்ஜெட் தயாரிப்பதற்கு ராகுல்காந்தியிடம் அனுமதி பெற்றேன் என்பது தவறான தகவலாகும். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இது குறித்து விவாதித்த பிறகே முடிவு எடுக்கப்பட்டது.தற்போது இதை யார் எதற்காக பேசி வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

 முதல்வர் பதவி எனக்கு யாரும் பிச்சை வழங்கவில்லை. யாருடைய ஆதரவிலும் முதல்வராக செயல்படவில்லை. இந்த அரசு செயல்படும் வரை விவசாயிகளின் நலனிற்கான திட்டங்கள் அமல்படுத்தப்படும். இதற்கு முன்பு ரூ.50 ஆயிரம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கி துறைக்கு அதனால் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் நிதி மூலம் அடையாளம் காண்பதற்கும் முயற்சி எடுக்கவேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. என்னுடைய வீட்டில் பணத்தை நிரப்பி கொண்டுவிடுவேன் என்றும் யாரும் நினைக்க வேண்டாம். விவசாயிகளின் நலனிற்காகவ இந்த அரசு கடன்களை  தள்ளுபடி செய்ய முன்வந்துள்ளது. இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் கடன் தள்ளுபடி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும்? என்பது குறித்தும் முழுமையாக ஆலோசனை நடந்தது.

கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவாக வெளியாக வேண்டும். மார்ச் 31ம் தேதி கடன் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்தால் அது விவசாயிகளுக்கு எவ்வித பயனும் ஏற்படாது. அதே நேரம் விவசாய கடன் தள்ளுபடி செய்தாலும் விவசாயிகளுக்கு மறுபடியும் கடன் வழங்க வேண்டும்.இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம். துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் கடன் தள்ளுபடி செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக எப்படி உதவி செய்ய முடியும் என்பதையும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மேலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி மட்டும் இன்றி விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் கடன் வழங்குவது குறித்தும் செயல் திட்டம் தயாரித்து அதை அரசிடம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே ,கடன் தள்ளுபடி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு முதல்வர் குமாரசாமி கூறினார்.சித்துவுக்கு பதிலடி புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்தார். அத்துடன் விவசாய கடன் தள்ளுபடி செய்தால் அதற்கு தேவையான நிதி எங்கே இருந்து பெறமுடியும் என்றும் சித்தராமையா கூறியிருந்தார். இதை மனதில் வைத்துக்கொண்டே முதல்வர் குமாரசாமி நேற்று நடந்த கூட்டத்தில் அதிகாரிகளிடம் கூறுவது போல் சித்தராமையாவுக்கு பதிலடி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!