×

எச் பிரிவில் கடும் போட்டி : போலந்தை வெளியேற்றியது கொலம்பியா

கஸான்: உலக கோப்பை எச் பிரிவு லீக் ஆட்டத்தில், கொலம்பியா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்ற போலந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கஸான் கால்பந்து ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் ஓரளவு தாக்குப்பிடித்த போலந்து அணி பின்னர் கொலம்பியாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இரு அணிகளுமே தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் தோற்றிருந்ததால் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில், 40வது நிமிடத்தில் யெர்ரி மினா அபாரமாக கோல் அடித்து கொலம்பியாவுக்கு 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார்.

இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் போலந்து கோல் பகுதியை முற்றுகையிட்டு அலை அலையாக தாக்குதல் நடத்திய கொலம்பியா, 70வது நிமிடத்தில் ராடமெல் பால்கோ மற்றும் 75வது நிமிடத்தில் ஜுவன் குவாட்ராடோ கோல் அடிக்க 3-0 என முன்னிலை பெற்றது. போலந்து வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கொலம்பியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த போலந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது. கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகியூஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். எச் பிரிவில் ஜப்பான், செனகல் தலா 4 புள்ளிகளும் கொலம்பியா 3 புள்ளிகளும் பெற்றுள்ளதால், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற இந்த 3 அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த பிரிவில் 28ம் தேதி நடக்கும்கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான் - போலந்து, செனகல் - கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

* இந்த போட்டியில் கொலம்பியா அணி 55 சதவீத நேரமும், போலந்து 45% நேரமும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* கொலம்பியாவின் 82% பாஸ்கள் துல்லியமாக இருந்தன. போலந்து வீரர்கள் 79% துல்லியமாக பந்தை தங்களுக்குள் கடத்திச் சென்றனர்.
* கொலம்பியா 10 தவறுகளும், போலந்து 15 தவறுகளும் செய்தன. போலந்து வீரர்கள் இருவர் மஞ்சள் அட்டை பெற்றனர்.
* நடப்பு உலக கோப்பையில் வெளியேறிய முதல் ஐரோப்பிய அணி போலந்து தான்.
* ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 32 லீக் ஆட்டங்களிலும் கோல் அடிக்கப்பட்டுள்ளது. 1954 தொடரில் 0-0 என்ற டிரா இல்லாமல் தொடர்ச்சியாக 26 ஆட்டங்கள் இருந்துள்ளன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்