×

17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

* டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம்  செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அறிவித்தார்.
* ஜூன்14ல்  இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை  வழங்கியதால் வழக்கு 3வது நீதிபதி அமர்விற்கு  மாற்றியமைக்கப்பட்டது.

புதுடெல்லி: டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த முறையீட்டை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அப்போதைய பொறுப்பு கவர்னர் சி.வித்யாசாகர் ராவை சந்தித்த டிடிவி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அதிமுகவின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் இவர்களது செயல்தானாக முன்வந்து அதிமுகவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்கு சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியன்று கோரிக்கை விடுத்தார்.  இதையடுத்து 19 எம்எல்ஏக்களில் எஸ்டிகே. ஜக்கையன், டிடிவி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி கவர்னரை சந்திக்க அழைத்து சென்றுவிட்டதாக தெரிவித்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தார். இதையடுத்து மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த செப்டம்பர் 18ம் தேதி அறிவித்தார். இதில் குறிப்பாக தமிழக சட்டப்பேரவையின் 1986ம் ஆண்டு விதிகளின்படியும், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதனால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ஆர். முருகன், வி.செந்தில் பாலாஜி மற்றும் உமா மகேஸ்வரி உட்பட 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சபாநாயகரின் இந்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. அதேபோல சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தக்கூடாது என கடந்த செப்டம்பர் 20ம் தேதியன்று இடைக்கால தடைவிதித்தார்.

இதற்குப்பின் இந்த வழக்குகளில் அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இருப்பதாக கூறி வழக்கு உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வால் சுமார் மூன்று மாதங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதியன்று வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 14ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்க வழக்கில் ‘‘சபாநாயகரின் உத்தரவு செல்லும்’’ என்றும், அதே அமர்வின் சக நீதிபதியாக இருந்த சுந்தர், ‘‘சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது’’ எனவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி அமர்விற்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தங்க தமிழ்செல்வனை தவிர மற்ற 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22ம் தேதி தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதியின் படி காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் இந்த தகுதி நீக்கத்தால் தமிழகத்தில் 18 தொகுதிகள் கடந்த 10மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் மக்கள் பணி மற்றும் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து முடங்கியுள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் மாறுபட்டு வந்துள்ளது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் வழக்கை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி அமர்வில் விசாரணை நடத்தினால் மேலும் கால தாமதம் ஆகும். இதில் நீதிபதி ஒருவரின் உறவினர் அரசு வழக்கறிஞராக உள்ளதால் அவரது செல்வாக்கை தன்னிச்சையாக பயன்படுத்தக்கூடும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் வழக்கில் எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது. அதனால் விசாரணை நியாயமாக நடக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். மேலும் மனுவை அவசர வழக்காக நீதிமன்றம் ஏற்று உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது  உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகளான அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் உத்தரவில்,” 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மேலும் வழக்கை 27ம் தேதி (நாளை)உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என நீதிபதிகள் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கேரளாவில் 20 தொகுதிகளுக்கு நாளை காலை...