×

சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு: ஓஎம்ஆர் சுங்கச்சாவடிகளில் 10% கட்டண உயர்வு

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 10%  கட்டணத்தை உயர்த்தி சாலை மேம்பாட்டு நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 10 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி, தமிழகத்தில் 17 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.இதுதவிர, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சுங்கச்சாவடிகளில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம், இசிஆர் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிரடியாக 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே, டீசல் கட்டணம் உயர்வால் தங்கள் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சரக்கு வாகன உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, சுங்க கட்டணம் உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தி பல போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், இசிஆரை தொடர்ந்து ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளிலும் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓஎம்ஆர் சாலையில், பெருங்குடி, துரைப்பாக்கம், இசிஆர் இணைப்பு சாலை, மேடவாக்கம், நாவலூர் ஆகிய 5 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன.

இங்கு தற்போது ஆட்டோவுக்கு ஒருமுறை பயணிக்க 9ம், சென்று திரும்பி வர ரூ.17ம், ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.30ம், மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.280ம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், கார்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.25ல் இருந்து 27 ஆகவும், சென்று திரும்பி வரும் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.54 ஆகவும், ஒருநாளில் பலமுறை பயணிக்கும் கட்டணம் 80ல் இருந்து ரூ.90 ஆகவும், மாதம் முழுவதும் பலமுறை பயணிக்க ரூ.1950ல் இருந்து ரூ.2150 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சரக்கு வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.97ல் இருந்து ரூ.107 ஆகவும், சென்று திரும்பி வர ரூ.180ல் இருந்து ரூ.200 ஆகவும், ஒருநாளில் பலமுறை பயணிக்க 280ல் இருந்து 310 ஆகவும், ஒரு மாதம் பலமுறை பயணிக்க ரூ.6200ல் இருந்து ரூ.6850 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு,...