×

ஆன்லைன் நிறுவனத்திற்கு போன் செய்தால் கட்சியில் சேரக்கோரி வரும் குறுஞ்செய்தி: மேற்குவங்கத்தில் காலூன்ற பாஜக யுக்தியா

கொல்கத்தா: கொல்கத்தாவில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்தால் பாஜகவில் சேரக்கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் தீவிர கால்பந்து ரசிகர் ஒருவர் இரவில் வீட்டில் உள்ளவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் தொலைக்காட்சியில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண ஆன்லைனில் ஹெட்போன் ஆடர் செய்துள்ளார். பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் அவரது தொலைக்காட்சிக்கு ஏற்றார் போல் 2 ஹெட்போன் ஆடர் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டுக்கு ஹெட்போன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் வீட்டிற்கு வந்த அவர் பார்சலை பிரித்து பார்த்தபோது 1 ஹெட்போன் மற்றும் ஒரு எண்ணெய் பாட்டில் இருந்துள்ளது.

இதனைக்கண்ட அவர் டெலிவரி செய்யப்பட்ட பெட்டியில் இருந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்துள்ளார். போன் ஒருமுறை ரிங் ஆகி சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் பாஜகவில் இணைய உங்களை அழைக்கிறோம் என இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன வாடிக்கையாளர் இணையத்தில் தேடி வேறொரு நம்பருக்கு போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் அவர் நடந்ததைக் கூறியுள்ளார். பார்சலில் அச்சிடப்பட்டிருந்த தொலைபேசி எண் எங்கள் நிறுவனத்தினுடையது இல்லை என தெரிவித்த அவர், இது தொடர்பாக மேலதிகாரியிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து இன்று காலை மீண்டும் ஆன்லைன் நிறுவனத்திலிருந்து போன் செய்து, உங்களுக்கு எண்ணெய் பாட்டில் தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது. இருப்பினும் அதனை நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களிடம் 1 ஹெட்போன் தான் இருந்தது, ஆகையால் மற்றோரு ஹெட்போனிற்கான தொகை உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும் என தெரிவித்தார். இறுதியில் அந்த வாடிக்கையாளர் தொலைக்காட்சியின் சத்தத்தை முழுமையாக குறைத்துவிட்டு கால்பந்துப்போட்டியை கண்டதாக சோகத்துடன் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...