×

உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் தாசில்தார் இருக்கையில் அமர்ந்த அதிமுக எம்எல்ஏ: அரசு அலுவலர்கள் அதிருப்தி

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் இருக்கையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடத்தியது அரசு அலுவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வட்ட அளவிலான குடிமைப்பொருள் வழங்கல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் தலைவர் என்ற பொறுப்பில் கோட்டாட்சியர் உள்ளார். கன்வீனர் என்ற பொறுப்பில் எம்எல்ஏ இருக்கிறார். இதில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும்.வட்ட அளவில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் விலையில்லா அரிசி, மானிய விலை மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் போன்றவை பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்கிறதா? இதில் முறைகேடுகள் எதுவும் நடக்கிறதா என பொதுமக்கள் கூறும் புகார்களை சிவில் சப்ளைத்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். இதில் கலந்து கொள்வதற்காக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள். தாசில்தார் சேம்பரிலும், அவருடைய இருக்கையிலும் தாசில்தார்தான் அமரவேண்டும். மற்றவர்கள் அவருக்கு பக்கத்து இருக்கையில் அமரலாம். தாசில்தார் 2ம் நிலை நீதித்துறை நடுவர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கம்பம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜக்கையன், தாசில்தார் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் ஆர்டிஓ, பக்கவாட்டில் போடப்பட்ட இருக்கையில் தாசில்தார் அமர்ந்தார். இது விதிகளுக்கு முரணானது. மக்கள் பிரதிநிதிகள் எப்படி அதிகாரிகள் இருக்கையில் அமரமுடியும் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் சேம்பர் உள்ளது. இங்கு அமைச்சரோ, எம்பி, எம்எல்ஏ யாராவது வந்தால் உட்கார முடியுமா என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற கூட்டங்கள் நடத்த உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மேல்புறம் ஷெட் போடப்பட்டுள்ளது. அங்கு நடத்தாமல் தாசில்தார் சேம்பரில் எம்எல்ஏவை உட்கார வைத்து நடத்தியது எதற்காக என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘‘ தாசில்தார் இருக்கையில் அமர்ந்து எம்எல்ஏ கூட்டம் நடத்துவது தவறான முன்னுதாரணம்’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!