×

வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பின் தரத்தை குறைத்து விடக்கூடாது: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள்

பெருந்துறை: ``வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதன் மூலம், தீர்ப்பின் தரத்தை குறைத்து விடக்கூடாது’’ என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள் விடுத்து பேசினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புதிய நீதிமன்ற கட்டிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: நீதித்துறை சரியாக செயல்பட நீதிபதிகள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. முக்கிய வழக்குகளின் தீர்ப்பின் தன்மை, வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கும் தரமான வாதங்களைப் பொறுத்தே அமைகிறது. நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுவோர் காலத்திற்கு ஏற்ப மாறலாம். ஆனால், நீதித்துறை சுதந்திரமாகவும், சார்புத்தன்மை இல்லாமலும் அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும். சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறையின் அடிப்படையாகும். மாவட்ட நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரையுள்ள நீதிமன்றங்களின் எல்லைகள் மாறுபடலாம். ஆனால், அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டத்தின் பார்வையில், சார்பு இன்றி, பயமின்றி, சுதந்திரமாக நீதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக நீதிமன்றங்களில் 5 ஆண்டுகளைக் கடந்தும் தீர்வு காணப்படாத வழக்குகளை மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அடைய முடியவில்லை. மிக விரைவில் இந்த இலக்கை அடைய உங்கள் அனைவரின் உதவியும் வேண்டும்.

வழக்குகளை சேவை நோக்கோடுதான் வழக்கறிஞர்கள் அணுக வேண்டும். சட்டப்பணிகள் ஆணையம் மூலம் செயல்படுத்தப்படும் சட்ட உதவி மையங்கள் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமன்ற வழக்குகளில் சட்ட உதவி வழங்குவது மட்டுமல்லாது, நீதி தருவோருக்கும், நீதி பெறுவோருக்கும் இடையே பாலம்போல் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்பட வேண்டும். வழக்குகளுக்கு தீர்வு காண்பதைப் பொறுத்தவரை, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாலும், வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதன் மூலம், தீர்ப்பின் தரத்தை குறைத்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...