×

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு

நாகர்கோவில்: திருக்கோயில் பணியாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அன்று முதல் அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நடக்காது என்று பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயில் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோயில்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு திருக்கோயில்கள் முதுநிலை பணியாளர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் ஜீவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: திருக்கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களின் இணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், சென்னையில் ஆணையர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் ஆகியவை நடந்தன.

இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டத்தை  தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் திருக்கோயில் பணியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் கோயில்களின் பணியாளர்கள், அர்ச்சகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்தையொட்டி வரும் 27ம் தேதியில் இருந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள், அபிஷேகங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். திருவிழாக்கள், தேரோட்டங்கள் போன்றவையும் வழக்கம் போல் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், அர்ச்சனை செய்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்டவை நிறுத்தப்படும். கோயில்களில் அன்னதானமும் வழங்கப்பட மாட்டாது. பக்தர்கள் வழிபடுவதற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்