×

வாய்ப்பை தக்கவைத்தது நடப்பு சாம்பியன் ஜெர்மனி : கடைசி கட்டத்தில் குரூஸ் அபார கோல்

சோச்சி: உலக கோப்பை எப் பிரிவு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி கடைசி நிமிடத்தில் டோனி குரூஸ் அடித்த அபாரமான கோலால் 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. சோச்சி பிஷ்ட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியின் 32வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் ஓலா டாய்வோனன் அற்புதமாக கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்திய ஜெர்மனி வீரர்கள், கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவர்களின் பல ஷாட்களை ஸ்வீடன் கோல்கீப்பர் ராபின் ஓல்சன் துடிப்பாக செயல்பட்டு தடுத்தார். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஸ்வீடன் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில், ஜெர்மனியில் மார்கோ ரியஸ் (48வது நிமிடம்) கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இரண்டாவது பாதி ஆட்டத்தின் கடைசி கட்டம் வரை இதே நிலை நீடிக்க, நடப்பு சாம்பியன் ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறும் என்றே தோன்றியது.

அந்த அணியின் ஜெரோம் போட்டெங் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றதால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மேலும் பின்னடைவை கொடுத்தது. 10 வீரர்களுடன் விளையாடிய ஜெர்மனி, வீரர்கள் காயம் அடைவதால் ஏற்படும் தாமதத்தை ஈடு செய்யும் வகையில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் வெற்றி கோல் அடித்து அசத்தியது. 90’+5வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில் ஜெர்மனியின் டோனி குரூஸ் அதியற்புதமாக கோல் அடித்து முழுதாக 3 புள்ளிகள் பெற வழிவகுத்தார். அந்த அணியின் மார்கோஸ் ரியஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். எப் பிரிவில் மெக்சிகோ அணி தொடர்ச்சியாக 2 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கின்றன. கடினமான எப் பிரிவில் 27ம் தேதி நடக்கும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி - கொரியா, ஸ்வீடன் - மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளின் முடிவைப் பொறுத்தே கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் 2வது அணி எது என்பது தெரியவரும்.

* டோனி குரூஸ் 94 நிமிடம், 39 விநாடியில் அடித்த கோல், உலக கோப்பை ஆட்டங்களில் கடைசி கட்டத்தில் அடிக்கப்பட்ட கோலாக அமைந்தது. முன்னதாக, 2006ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ டோட்டி 94 நிமிடம், 26 விநாடியில் கோல் அடித்துள்ளார்.
* ஜூன் 1990க்கு பிறகு ஸ்வீடன் அணி முதல் முறையாக உலக கோப்பை லீக் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளது. தொடர்ச்சியாக 10 லீக் ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்து வந்த ஸ்வீடனின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
* உலக கோப்பையில் ஜெர்மனி அணி ஒரு போட்டியில் தோற்ற பிறகு அடுத்த போட்டியில் வெற்றியை வசப்படுத்துவதை தொடர்ச்சியாக 9வது முறையாக நிகழ்த்தியுள்ளது.
* ஸ்வீடன் கோல்கீப்பர் ராபின் ஓல்சன் தொடர்ச்சியாக 548 நிமிடத்துக்கு கோல் விட்டுக் கொடுக்காமல் இருந்துள்ளார். அவர் கடைசியாக 2017 அக்டோபரில் நெதர்லாந்துக்கு எதிராக கோல் விட்டுக் கொடுத்திருந்தார்.
* 2010ல் செர்பியாவுக்கு எதிரான உலக கோப்பை ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார். அதன் பிறகு உலக கோப்பையில் ரெட் கார்டு காண்பிக்கப்பட்ட முதல் ஜெர்மனி வீரர் ஜெரோம் போட்டெங் தான்.
* இந்த போட்டியில் ஜெர்மனி 76 சதவீத நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஸ்வீடன் வெறும் 24% நேரமே பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர்.
* ஜெர்மனி 18 ஷாட்களும், ஸ்வீடன் தரப்பில் 7 ஷாட்களும் அடிக்கப்பட்டன. இவற்றில் ஜெர்மனி வீரர்கள் அடித்த 6 ஷாட்களும், ஸ்வீடனின் 5 ஷாட்களும் இலக்கு நோக்கி துல்லியமாக இருந்தன.
* ஜெர்மனிக்கு 8 கார்னர் வாய்ப்புகளும், ஸ்வீடனுக்கு 3 கார்னர் வாய்ப்புகளுக் கிடைத்தன.
* ஸ்வீடன் வீரர்கள் 13 தவறுகள் செய்த நிலையில்  ஜெர்மனி தரப்பில் 12 தவறுகள் இழைக்கப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்