×

அரை டஜன் கோல் போட்டு பனாமா அணியை பந்தாடியது இங்கிலாந்து : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

நோவ்கோராட், ஜூன் 25: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், பனாமா அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நோவ்கோராட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் கோல் மழை பொழிந்தனர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஜான் ஸ்டோன்ஸ் (8வது, 40வது நிமிடம்), கேப்டன் ஹாரி கேன் (22’ மற்றும் 45’+1’வது நிமிடத்தில் பெனால்டி கிக்), ஜெஸ்ஸி லின்கார்ட் (36வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் ஒரு கோல் போட்ட ஹாரி கேன் (62வது நிமிடம்) ஹாட்ரிக் சாதனை படைத்தார். நடப்பு தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து ஹாட்ரிக் கோல் அடித்த 2வது வீரர் என்ற பெருமை ஹாரி கேனுக்கு கிடைத்துள்ளது.

பனாமா தரப்பில் பிலிப் பலாய் 78வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றதுடன் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் விளையாடுவதையும் உறுதி செய்தது. ஜி பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் துனிசியா, பனாமா அணிகள் பரிதாபமாக வெளியேறின. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தொடர்ந்து 2வது முறையாக ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். துனிசியா அணிக்கு எதிராக 2 கோல் அடித்திருந்த கேன், தற்போது ஹாட்ரிக் அடித்ததன் மூலமாக மொத்தம் 5 கோல்களுடன் தங்க ஷூவுக்கான வேட்டையில் லூகாகு, ரொனால்டோவை (தலா 4 கோல்) முந்தியுள்ளார்.

* இங்கிலாந்து 59%, பனாமா 41% நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* பனாமா 8 ஷாட், இங்கிலாந்து 11 ஷாட் அடித்தன. இவற்றில் இங்கிலாந்தின் 7 ஷாட்கள் இலக்கு நோக்கி பாய்ந்தன. பனாமாவின் 2 ஷாட் மட்டுமே துல்லியமாக இருந்தது.
* இங்கிலாந்துக்கு 3 கார்னர் வாய்ப்பும், பனாமாவுக்கு 2 வாய்ப்பும் கிடைத்தன.
* இரு அணிகளும் தலா 13 தவறுகள் செய்தன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?