×

ஆளுநர் ஆய்வு பணி செய்வதை தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை

* மாநிலம் முழுவதும் ஆய்வு தொடரும்
* கவர்னர் மாளிகை அதிரடி அறிவிப்பு

சென்னை: அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்து வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் திமுகவினர் கைது  செய்யப்பட்டு வரும் நிலையில், கவர்னர் மாளிகை மிரட்டல் விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘கவர்னரின் பணிகளுக்கு  இடையூறு விளைவிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டப்பிரிவு 124ன் கீழ் வழிவகை உண்டு’ என  கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.  இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கவர்னர்  செல்லும் மாவட்டங்களில் திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 22ம் தேதி நாமக்கலில் ஆய்வு பணிக்காக வந்த கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதாக திமுகவினர் 293 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் சென்னையில் கவர்னர் மாளிகையை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக மு.க.ஸ்டாலின் மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ‘கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்’ என எச்சரிக்கை  விடுத்தார். இந்நிலையில், கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:கவர்னர் பன்வாரிலாலின் மாவட்ட வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் ராஜ்பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக  பத்திரிகை செய்திகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கவர்னரின் சட்ட அதிகாரம் குறித்து ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர்   மாதம் கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது. எனவே தவறான புரிதல்களை தவிர்க்க, சரியான உண்மை நிலையை மீண்டும் தெரியப்படுத்த  வேண்டியுள்ளது. அரசியலமைப்பின்படி, கவர்னர் என்பவர் மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்லும் அதிகாரமும், சுதந்திரமும் பெற்றவர் ஆவார். அத்தகைய பயணங்களில்  மாவட்ட கலெக்டர் அவரை வரவேற்க வேண்டுமெனவும், தேவைப்பட்டால் பயணத்தை நீட்டிக்கலாம் என்றும் நெறிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. அரசு  அதிகாரிகளுக்கு தலைமை வகிக்கும் தகுதி படைத்தவரான கவர்னர், தனது பயணத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசவும் ஆலோசனை நடத்தவும் முழு  சுதந்திரம் உண்டு.
மாநிலத்தில் நெருக்கடியான காலகட்டங்களில் சரியான முடிவை எடுப்பதற்கும் மாதந்தோறும் ஜனாதிபதிக்கு அறிக்கை அளிப்பதற்கும், கவர்னர்  மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதும், மாவட்டங்களின் நிலை குறித்தும் அறிந்து கொள்வதும் அவசியமானதாகும். அதன் அடிப்படையிலேயே,  கவர்னர் தனது மாவட்ட பயணங்களின் போது அரசு அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார்.

அத்தகைய சமயங்களில் அவர் அரசின் எந்த துறையின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனத்தை முன்வைத்தது இல்லை; அரசு அதிகாரிகளுக்கு எந்த  உத்தரவும் பிறப்பித்ததும் இல்லை. இந்த சந்திப்பின்போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகுறித்து அதிகாரிகள் கவர்னரிடம் விளக்கம் அளிக்கின்றனர்.  இதையே ‘ஆய்வு’ என்ற வார்த்தையை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் மக்களை தவறாக வழிநடத்த முயல்கிறார். சட்டத்தை அறியாதவராக  அவர், ராஜ்பவன் சாலையை முடக்கி முற்றுகையிடுவதாக வெளிப்படையாகவே எச்சரிக்கிறார்.ஐபிசி சட்டப்பிரிவு 124ன் கீழ், கவர்னர் மாளிகையை பாதுகாப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி அல்லது கவர்னரின்  செயல்பாடுகள் மற்றும் பணிகளில் குறுக்கீடு செய்தாலோ, தவறான முறையில் தடுக்க முயன்றாலோ,அவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை உண்டு.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆரம்ப கட்டத்திலேயே இது தொடர்பான சட்ட அதிகாரம்  குறித்து விளக்கம் அளிக்க எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராஜ்பவனுக்கு வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.  சட்டத்தை புரிந்து கொள்ளவும், தங்களின் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவும் போதிய கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சட்டப்படி மாநில அரசு செயல்படுவதற்கு, அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை கவர்னருக்கு உண்டு. சரியான சட்ட நிலையை புரிந்து  கொள்ளாமல், சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்பவர்களும், விமர்சிப்பவர்களும் சட்டத்தை மீறியவர்கள் ஆவர். எனவே பொதுமக்களின் நலன் கருதி  கவர்னர் மேற்கொண்டு வரும் மாவட்ட சுற்றுப்பயணங்கள் வரும் காலங்களிலும் தொடரும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தும் திமுகவினரை மிரட்டும் வகையில் கவர்னர் மாளிகை விடுத்துள்ள இந்த அறிக்கை தமிழக அரசியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அரசின் பணிகளை தான் மாவட்டம்தோறும் ஆய்வு செய்கிறார் கவர்னர்.
* அரசு துறைகளை அவர் விமர்சனம் செய்ததில்ைல.
* அவரின் ஆய்வு பணிகளை தடுக்க யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை.
* அப்படி தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்...