×

தீவிரவாதத்தை வேரோடு அளிக்க ராணுவத்திற்கு உதவியாக கமாண்டோ வீரர்கள் எல்லையில் குவிப்பு

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதத்தை வேரோடு அளிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்ததையடுத்து கமாண்டோ வீரர்களும் குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்களும் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முக்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீவிரவாதிகளை வேரோடு அளிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார். தற்போது ராணுவத்தினர் 210 தீவிரவாதிகளை குறிவைத்து அதிரடி தாக்குதல்களை தொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின்போது உயிர் சேதத்தை குறைப்பதற்காக என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்களையும், குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்களையும் அதிக அளவுக்கு காஷ்மீருக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது தீவிரவாதிகள் அனைவரையும் சுட்டுக்கொன்றத்தில் கமாண்டோ படையின் பங்கு மகத்தானது. அதிநவீன ஆயுதங்கள், ரேடார் கருவிகள் போன்றவற்றுடன் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள கமாண்டோ வீரர்கள் அங்குள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற உள்ளதை குறிக்கும் வகையில் எல்லை அருகே கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு எல்லை பகுதியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் ஆளுநர் வோரா தலைமையில் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சியான காங்கிரஸ், பாஜகவின் மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...