×

நாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி

ரஸ்தோவ்: பிபா உலக கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற உருகுவே அணி நாக்-அவுட்  சுற்றுக்கு முன்னேறியது.ரஸ்தோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் சவுதி அரேபியா குறைந்தபட்சம் டிரா செய்தால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு  முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அணி ஆரம்பத்திலேயே பின்தங்கியது.எகிப்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் 3 கோல் வாய்ப்புகளை வீணடித்த உருகுவேயின் நட்சத்திர வீரர் சுவாரெஸ் இம்முறை வாய்ப்பை சரியாக  பயன்படுத்திக் கொண்டார். ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் உருகுவேக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, சவுதி கோல் கீப்பர் முகமது அல்  ஓவைஸ் பந்தை தடுப்பதற்காக தேவையில்லாமல் அவசரப்பட்டு முன்னேறிச் செல்ல, சுவாரெஸ் மிக எளிதாக கோல் அடித்தார். 100வது சர்வதேச  போட்டியில் களமிறங்கிய சுவாரெசுக்கு சவுதி அளித்த பரிசாக இந்த கோல் அமைந்தது.

உருகுவே 1-0 என்ற முன்னிலையுடன் முதல் பாதி முடிந்தது. அடுத்த பாதியில், ஆட்டத்தை டிரா செய்ய சவுதி வீரர்கள் கடுமையாக போராடினர்.  ஆனால் கோல் அடிப்பதற்கான சரியான வாய்ப்புகள் அந்த அணிக்கு கிடைக்கவில்லை. இறுதியில் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் உருகுவே, ரஷ்யா இரு அணிகளும் தலா 2 வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. இந்தாண்டு  உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முதல் 2 அணிகள் என்ற பெருமையை பெற்றன. இப்பிரிவில் சவுதி, எகிப்து இரு அணிகளும்  போட்டியிலிருந்து வெளியேறின.

* சர்வதேச போட்டியில் சுவாரெஸ் தனது 52வது கோலை பதிவு செய்துள்ளார்.
* உலக கோப்பை பிரதான சுற்றுக்கு 5 முறை தகுதி பெற்ற சவுதி அரேபியா 4வது முறையாக லீக் சுற்றிலேயே வெளியேறி உள்ளது. கடந்த 1994ல்  தனது அறிமுக தொடரில் மட்டுமே சவுதி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.
* உலக கோப்பையில் சவுதி அரேபியா கடைசியாக விளையாடிய 12 போட்டியில் ஒரு வெற்றி (டிரா-2, தோல்வி-10) கூட பெறவில்லை.
* உலக கோப்பையில் ஆசிய அணிகளுக்கு எதிராக விளையாடிய 4 போட்டியிலும் உருகுவே வென்றுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு