×

ஈரானை வென்றது ஸ்பெயின்

கஸான்: உலக கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில் டிகோ கோஸ்டா அசத்தலில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வென்றது.கஸானில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த ஆட்டத்தில் கடும் போட்டி நிலவியது. கடந்த 2010ல் உலக சாம்பியனான ஸ்பெயின் 2014 உலக  கோப்பை தொடரின் லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. எனவே இம்முறை சிறப்பான செயல்பாட்டை காட்ட வேண்டிய அந்த அணி,  முதல் லீக் ஆட்டத்தில் போர்ச்சுகலை டிரா செய்தது. நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசிப்படுத்திக் கொள்ள ஈரானை வென்றாக வேண்டிய  நிலையில் இருந்தது. அதே நேரத்தில் ஈரான் முதல் லீக் போட்டியில் மொராக்கோவை வென்ற நிலையில், கூடுதல் நம்பிக்கையுடன் ஸ்பெயினை எதிர்  கொண்டது.

ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் ஸ்பெயின் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. கிடைத்த சில  வாய்ப்புகளில் ஈரானும் அதிரடி காட்டியது. அந்த அணி கோல் அடிக்க வேண்டிய 3 வாய்ப்புகள் நூலிழையில் தவறின. அதே நேரத்தில் ஸ்பெயினின்  கோல் முயற்சிகளை ஈரான் கோல் கீப்பர் பெய்ரான்வான்ட் அபாரமாக தடுத்தார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி தொடங்கியதும், 54வது நிமிடத்தில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் டிகோ கோஸ்டா  அபார கோல் அடித்தார். போர்ச்சுக்கலுக்கு எதிரான போட்டியில் 2 கோல் அடித்து அசத்திய அவர் இம்முறையும் அணிக்கு கைகொடுத்தார். இதற்கு  பதிலடி தருவதற்கான வாய்ப்பு ஈரானுக்கு 62வது நிமிடத்தில் கிடைத்தது. இதில் எஸாதோலாஹி கோல் அடிக்க, ஈரான் வீரர்கள் மகிழ்ச்சியில்  கொண்டாடினர்.

ஆனால், வீடியோ உதவி நடுவர் ஆய்வுக்கு பிறகு, இந்த கோல் ஆப்சைடாக  அறிவிக்கப்பட்டது. இதனால் ஈரான் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.  தொடர்ந்து, ஸ்பெயினின் தடுப்பாட்டத்தால் ஈரானால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. 2 லீக் ஆட்டத்தில் 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள ஸ்பெயின், தொடரிலிருந்து வெளியேறிய மொராக்காவுடனான  கடைசி லீக் ஆட்டத்தில் குறைந்த பட்சம் டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி விடலாம். போர்ச்சுகலுடனான கடைசி லீக் ஆட்டத்தில்  ஈரானின் முடிவைப் பொறுத்தே எந்தெந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பது தெரியும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...