×

ஜெடினாக்கின் பெனால்டி கோலால் டென்மார்க்கை டிரா செய்தது ஆஸ்திரேலியா

சமரா: உலக கோப்பை கால்பந்து தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெடினாக்கின் பெனால்டி கோலால் 1-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை  ஆஸ்திரேலியா டிரா செய்தது.சமராவில் நேற்று மாலை நடந்த இப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு டென்மார்க் அணி அதிர்ச்சி தந்தது. டென்மார்க்கின்  கிறிஸ்டியன் எரிக்சன் 7வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர ஆஸ்திரேலியா துடித்துக்  கொண்டிருந்த நிலையில், 38வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை மைலி ஜெடினாக் தவறவிடவில்லை. அவர் அடித்த  கோலால் ஆட்டம் சமநிலையை எட்டியது.

முதல் பாதி இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் முடிந்தது. 2வது பாதியில் வெற்றி பெற இரு அணிகளும் சளைக்காமல் போராடின. பந்தை  அதிகமாக தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள், கோல் அடிக்க முட்டி மோதினர். ஆனாலும், ஆஸியின் முயற்சிகளை கடைசி கட்டத்தில்  டென்மார்க் வீரர்கள் முறியடித்தனர். டென்மார்க்கின் முயற்சிகளும் பலிக்கவில்லை.இதன் காரணமாக, இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா 1 புள்ளியுடன், பெரு அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய  கட்டாயத்தில் உள்ளது. 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள டென்மார்க், கடைசி லீக் போட்டியில் பிரான்சை சந்திக்கிறது.

சர்ச்சையான விஏஆர் முடிவு
ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதே, போட்டி டிரா ஆவதற்கு முக்கிய காரணம். வீடியோ உதவி நடுவர் எடுத்த இந்த முடிவு  கடும் சர்ச்சையாகி உள்ளது. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் யுசுப் பால்சன் கையில் பந்து பட்டதாக ஆஸ்திரேலிய வீரர்கள் கள  நடுவரிடம் முறையிட்டனர். விஏஆர் முறையில் ரீப்ளே பார்த்த போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தலையில் பட்ட பந்து, யுசுப் கையில் வந்து மோதியது.  இதை யுசுப் வேண்டுமென்று செய்யவில்லை. ஏதேச்சையாக வேறு வழியின்றி பந்து மோதியது. இதற்கு எப்படி பெனால்டி தரலாம் என சமூக  வலைதளங்களில் டென்மார்க் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

* அசாம் மாநிலம் கவுகாத்தியில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி தேர்வு  செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் அணியில் 34 பேரும், பெண்கள் அணியில் 31 பேரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஓட்டம், தடை ஓட்டம், நீளம்  தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
* சென்னை பிரசிடன்சி கிளப், சர்வதேச டென்னிஸ் கழகம் இணைந்து 3வது ஆண்டாக ஐடிஎப்-பிசி ஓபன் டென்னிஸ் போட்டிகளை நாளை முதல் 30ம்  தேதி வரை நடத்துகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த கிளப்கள் மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளை சேர்ந்த கிளப்  வீரர்கள் 150 பேர் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் தினமும் பிரசிடன்சி கிளப் வளாகத்தில் நடைபெறும்.
* கடந்த மே மாதம் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அகமது செஷாத்  ஊக்க மருந்து உட்ெகாண்டது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. அவருக்கு குறைந்தபட்சம் 3 மாதம் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க  வாய்ப்புள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்…