×

வகுப்புகள் நேரம் மாற்றம் கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மன்னார்குடி: மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் கல்லூரி இரண்டு ஷிப்டுகளாக சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.  சென்ற கல்வியாண்டில் கலை பிரிவு மாணவர்கள் காலையிலும், அறிவியல் பிரிவு மாணவர்கள் மாலையிலும் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு சுழற்சி முறையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி அறிவியல் பிரிவு மாணவர்கள் காலையிலும், கலை பிரிவு மாணவர்கள் மாலையிலும் படிக்குமாறு மாற்றி அமைத்துள்ளனர்.இக்கலூரியில் கலை பிரிவு மாணவர்களே அதிக அளவில் படிப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த மாற்றம் குறித்து முன்னதாகவே தெரிவிக்கவில்லை என்று கலைப்பிரிவு மாணவர் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 அத்துடன் கல்லூரி நிர்வாகத்தின் முடிவை ஏற்க மறுத்தும், வகுப்புகளை காலை நேரத்தில் மாற்றியமைக்க கோரியும் கல்லூரியில் நேற்று கலை பிரிவு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து கலை பிரிவு மாணவிகள் கூறும்போது, பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் எங்களை போன்றவர்களை மாலை நேர  வகுப்பிற்கு   மாற்றினால் நாங்கள் கல்லூரி முடிந்து இரவில்தான் வீடு திரும்ப முடியும். இதனால் எங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். நாங்கள் கல்லூரியில் சேரும் போது காலையில் வகுப்புகள் என்று கூறிவிட்டு தற்போது மாற்றுவதை திரும்ப பெற வேண்டும் என்றனர்.உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்ததால், கல்லூரி முதல்வர் சித்ரகலாராணி ஜூலை 1ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம்...