×

நாகர்கோவில் - செங்கோட்டை இடையே சர்க்குலர் பயணிகள் ரயில் இயக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில்-செங்கோட்டை இடையே சர்க்குலர் பயணிகள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது குற்றாலம். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில், கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்கிறது. ஆகவே ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் வரத்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே அருவியில் தண்ணீர் விழ தொடங்கிவிட்டது.  ஆகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அருவிகளில் குளிப்பதற்காக கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ரயில், பேருந்து மூலம் திருநெல்வேலிக்கு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து குற்றாலத்துக்குச் செல்வது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனினும் முதியவர்கள், குழந்தைகளை ெகாண்ட குடும்பத்துடன் குற்றாலம் வருபவர்கள் ரயில் பயணத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு சிறப்புப் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. குமரி மாவட்டத்திலிருந்து குற்றாலம் செல்ல திருநெல்வேலி சென்று அங்கிருந்து செங்கோட்டை செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். ஆனால் இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் போதிய ரயில்வசதிகள் இல்லை. குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் போதிய ரயில் போக்குவரத்து வசதி இல்லாததால், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சாலை வழிப் பயணத்தையே நம்பியிருக்க வேண்டியது உள்ளது. குமரியில் இருந்து குற்றாலத்திற்கு ரயிலில் செல்வதாக இருந்தால் கூட, நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் சென்று அங்கிருந்து செங்கோட்டை செல்லும் ரயிலில் செல்ல வேண்டும். இந்த ஆண்டு இரண்டு ரயிலில் சென்றாலும் போதிய கால அட்டவணையில் இணைப்பு ரயில் வசதியும் கிடையாது. குறிப்பாக, திருநெல்வேலியிருந்து செங்கோட்டைக்கு தினசரி நான்கு பயணிகள் ரயில்கள் உள்ளன.

ஆனால் இரண்டுக்கும் இணைப்பாக செயல்படும் வகையில், நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு பகல்நேரத்தில் பயணிகள் ரயில் வசதி கிடையாது.செங்கோட்டை புனலூர் மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் இந்த பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பாதையில் சுற்றுபாதை ரயில் அதாவது சர்க்குலர் ரயில் இயக்க நல்ல வசதி வாய்ப்புகள் உள்ளன. தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம் வழியாக புனலூருக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதே போல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலையில் இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் வரை நீடடிப்பு செய்து சர்க்குலர் ரயிலாக இயக்க வேண்டும் என்பதுதான் ரயில் பயணிகளின் கோரிக்கை. இவ்வாறு சர்க்குலர் ரயிலாக இயக்கும் போது அனைத்து பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் நேரடியாக குற்றாலத்திற்கு ரயில் வசதி கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆகவே ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் இந்த கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம்...