×

வேலியே பயிரை மேய்ந்த கதையாக டூ வீலர் பார்க்கிங்கான ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரல்வாய்மொழி: வேலியே பயிரை மேய்ந்த கதையாக செண்பகராமன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனை ஊழியர்களே டூ வீலர் பார்க்கிங்காக மாற்றி உள்ளது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. செண்பகராமன்புதூர் மருத்துவமனை தோவாளை தாலுகாவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் தங்குவதற்கான வசதிகளும் உள்ளது. ஆகவே கண்ணன்புதூர், சோழபுரம், மாதவலாயம், சகாயநகர், சந்தவிளை, தாழக்குடி, தோப்பூர், வெள்ளமடம் உள்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொது மக்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக மகப்பேரு சிகிச்சைக்காக அதிகமானனோர் வந்து செல்வது வழக்கம். மருத்துவமனையில் முன் பகுதியில் நோயாளிகளுக்கான அனுமதி சீட்டு அறை, அதன் அருகே  மருத்துவரை பார்க்கின்ற அறை, எக்ஸ்ரே எடுக்கும் இடம், அவசர பிரிவு ஆகியவையும் உள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்கு வருகின்ற வெளி நோயாளிகள் ஸ்டிரெச்சர் மூலம் அவசர பிரிவுக்கு இந்த வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும்.

இது தவிர மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் அனுமதி சீட்டு வாங்கி கொண்டு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். நோயாளிகளும் இந்த வழியாகத்தான் செல்கின்றனர். மேலும் வெளி நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் கொண்டு வருகின்ற டூ வீலர்கள், 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்துவதற்காக மருத்துவமனை வளாகத்தில் தனியாக வசதியான, விசாலமான இடங்கள் உள்ளன.ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் தங்களது டூ வீலர்களை, வளாகத்தில் நிறுத்துவதற்கு பதிலாக நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்து செல்கின்ற முக்கியமான வழியில் நிறுத்தி வைக்கின்றனர். இது நோயாளிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. நோயாளிகளை வைத்து தள்ளி செல்கின்ற ஸ்டிரெச்சர்களை கொண்டு செல்லும் ஊழியர்கள் படாத பாடு பட வேண்டியது உள்ளது.இது தொடர்பாக பொறுப்பு அதிகாரிகளும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டால், அப்படித்தான் வாகனத்தை நிறுத்துவேன். உங்களுக்கு இதில் என்ன பிரச்னை என்று மிரட்டல் தொனியில் பேசுகிறாராம். இவரது பேச்சை கேட்டு நோயாளிகள், மருத்துவமனைக்கு வந்து செல்கின்ற பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்வது போல், மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான அனைத்து வசதிகள் இந்தும் மருத்துவமனைக்கு உள்ளேதான் எனது வாகனத்தை நிறுத்துவேன் என்று ஊழியர் அடம் பிடிப்பது சரிதானா? இதே நிலை மாவட்டத்தில் உள்ள இன்னும் சில ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆகவே இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்...