×

காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தி்ற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமிக்க மறுத்து வரும் நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கபினி அணையிலிருந்து உபரி நீரை தான் தமிழகத்திற்கு வழங்கினோம் என்ற கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கருத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக காவிரி விவகாரத்தில் குமாரசாமி நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இது பற்றி பேசிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஜீவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்களை அறிவிக்கிறோம் என தொடர்ந்து கூறிவிட்டு இப்போது உறுப்பினர்களை அறிவிக்க முடியாது என்ற நிலையில் கர்நாடகா பிடிவாதமாக உள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் தரமாட்டோம் என்பது தான் கர்நாடகாவின் நிலைப்பாடாக உள்ளது.

கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன் என தமிழக கோயில்களில் வந்து சுவாமி தரிசனம் செய்தார் குமாரசாமி. ஆனால் இங்குள்ள விவசாயிகளை குமாரசாமி கேவலமாக நினைப்பதாக சாடினார். குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் முதல்வர் பழனிச்சாமி காவிரி வெற்றி விழா கொண்டாடுவது முறையல்ல என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜுன் மாதத்திற்கான 9 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்திற்கான 30 மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 40 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...