×

ஜெ., மரண விவகாரம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலக்கெடு 2-வது முறையாக நீடிப்பு

சென்னை; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடுவை இரண்டாவது முறையாக நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 24-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அந்த ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 24-ம் தேதி வரை ஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக குருமூர்த்திக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் விசாரணை கமி‌ஷன் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்டவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு செப்டம்பர் 24-ம் தேதி விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம், டிசம்பரில் மேலும் 6 மாதம் அவகாசம் கோரியது. அதனடிப்படையில்  தமிழக அரசு அவகாசத்தை நீட்டித்து வழங்கியது. வரும் ஜூன் 24ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், இதுவரை, 50 சாட்சியங்களுக்கும் குறைவாகவே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறி மேலும் 6 மாதங்கள் அவகாசம் கேட்டு ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது விசாரணை ஆணையத்தி்ன் காலக்கெடுவை 4 மாதங்கள் மட்டுமே நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...