×

காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகள் நியமிப்பது பற்றி கர்நாடக முதலமைச்சருடன் பேசுவேன் : கமல்ஹாசன்

புதுடெல்லி: தமிழகத்தில் நிலவும் சில அவலங்கள் குறித்து சோனியாகாந்தியுடன் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் சோனியாகாந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி வழக்கறிஞரையும் கைது செய்தால் இது எங்கு சென்று முடியும் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். நேரம் வரும் போது தேர்தல் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும், காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகள் நியமிப்பது பற்றி கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் பேசுவேன் என்று சோனியாவை சந்தித்தப்பின் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் கமல் பதிவு செய்திருந்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஜூன் 20ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 3ம் தேதி அவருக்கு கடிதம் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இதில் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து கமல்ஹாசன் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று ஆஜரானார். இதை தொடர்ந்து  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து  பேசினார்.  இந்த  சந்திப்பானது சுமார் 1.30மணி நேரம் நீடித்தது. இந்நிலையில் இன்று சோனியாகாந்தியை சந்தித்து கமல் பேசியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…