×

அரசு அழைக்காததால் அதிருப்தி போராட்டத்தை தீவிரமாக்க லாரி உரிமையாளர்கள் முடிவு: இன்று 4வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது

சென்னை: அரசு அழைத்து பேசாததால் நாடு முழுவதும் இன்று 4வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிக்கிறது. தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த  உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த  மூன்று நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. தமிழகத்தில் 50 சதவீதம் லாரிகள் ஓடவில்லை என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதனால் காய்கறி,  அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று 3வது நாளாக காய்கறி வரத்து குறைந்தது. ஸ்டிரைக் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக தகவல்  வெளியானதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வருகை குறைந்தது. விலை அதிகம் இருக்கும் என்ற  பீதியில் மக்கள் வரவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே லாரி ஸ்டிரைக்கால் அதன் உரிமையாளர்கள், டிரைவர்கள், வணிகர்கள், சிறு,  குறு வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றும் மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசவில்லை. இதனால் நேற்றும் தமிழகத்தில் 50 சதவீதம் லாரிகள்  ஓடவில்லை. இன்று 4வது நாளாக லாரி ஸ்டிரைக் தொடர்கிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால் விரைவில்  பால், தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் ஸ்டிரைக்கில் பங்கேற்கும் என உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகள் எங்கள் போராட்டத்தை வழக்கம்போல் அலட்சியப்படுத்தியுள்ளது. இதை சக லாரி உரிமையாளர்களும் கவனித்து வருகின்றனர்.

எனவே இதுவரை ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளாத சங்கங்களையும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுள்ளோம். பொதுமக்கள் நலன்  கருதி, பால், மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் இதுவரை ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. அரசு அழைத்து பேசாவிட்டால் விரைவில் இந்த லாரிகளும் ஸ்டிரைக்கில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. எனவே, எங்களுக்காக இல்லாவிட்டாலும்  மக்களின் நலனை கருத்தில் கொண்டாவது அரசு உடனே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு சுகுமார் கூறினார்.

லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக செயல்தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் தளத்தில், ‘‘கடந்த மூன்று தினங்களாக பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை  உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். மேலும், தமிழக முதல்வர்  “வழக்கம்போல்” நமக்கென்ன என்று இருந்துவிடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்